×

பணம் கட்டாவிட்டால் தானாக மின் இணைப்பு துண்டிக்கும் ஸ்மார்ட் மீட்டர்: தமிழகத்தில் விரைவில் அமல் ஆக வாய்ப்பு

நெல்லை: மின்துறையில் நவீன தொழில்நுட்ப வசதிகளை புகுத்தும் நடவடிக்கைகளை மத்திய மின்வாரியத்துறை ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது. மின் திருட்டு, மின் பயன்பாட்டு கட்டணம் செலுத்தாமல் இழுத்தடிப்பது போன்ற காரணங்களால் இத்துறைக்கு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதில் உள்ள குறைபாடுகளை தவிர்க்க மின்துறையில் கணினி தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இருந்த மின் மீட்டர்கள் அகற்றப்பட்டு எலக்ட்ரானிக் மின் மீட்டர்கள் பொறுத்தப்பட்டன.

மின்துறை குறிப்பிட்டு தெரிவிக்கும் எலக்ட்ரானிக் மின்மீட்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் டிஜிட்டில் மின் மீட்டர் முறை நாடு முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பை உள்ளிட்ட சில பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளை தனியார் அமைப்புகள் மேற்கொண்டு அதற்கான சேவைகளை செய்து வருகின்றன. அவர்கள் டிஜிட்டில் மின் மீட்டர் போன்ற நவீன தொழில்நுட்ப யுக்திகளை புகுத்தியுள்ளனர். தமிழகத்தில் டிஜிட்டில் மின் மீட்டர் முறையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக முதற்கட்டமாக சென்னையில் பரீட்சார்த்த முறையில் குறிப்பிட்ட பகுதியில் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டிஜிட்டில் மின் மீட்டரை குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் பொருத்திய பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் அந்த மின் மீட்டார் தானாக மின் சப்ளையை நிறுத்திவிடும்.

பணம் செலுத்திய பின்னர்தான் மீண்டும் மின் விநியோகம் தொடங்கும். மின் பயணீட்டு அளவு எடுக்க வருபவர் குறிப்பிட்ட நாட்களில் வராவிட்டாலும் மின் அலுவலக ஆன்லைன் பதிவில் உபயோகிப்பாளர் அந்த மாதத்தில் பயன்படுத்திய மின் பயன்பாடு அளவு தெரிந்துவிடும். மேலும் போஸ்டு பெய்டு, பிரீபெய்டு முறையிலும் இதன் உபயோகம் இருக்கும். சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று கியூவில் காத்திருந்து பணம் கட்டும் நிலை உள்ளது. மேலும் ரொக்கமாக மட்டுமின்றி கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு கொடுத்தும் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள ஸ்வைப்பிங் இயந்திரம் மூலம் பணம் கட்டமுடியும். ஸ்வைப்பிங் வசதியுள்ள அலுவலகத்தில் இதையும் பெரும்பாலான மின்உபயோகிப்பாளர்கள் பயன்படுத்துவதில்லை என தெரியவந்துள்ளது. எனவே வரும் நாட்களில் பணமில்லா பரிவர்த்தனையை மின் பயனாளிகளிடம் மேற்கொள்ள இத்துறை கூடுதல் நடவடிக்கை எடுக்கஉள்ளது.

நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்

தமிழகத்தில் வணிக தேவைக்கான புதிய மின் இணைப்பு ஆன்லைன் மூலம் பெறும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது. நாளை மார்ச் 1ம் தேதி முதல் வீடுகளுக்கான மின் இணைப்பும் ஆன்லைனிலேயே மேற்கொள்ளப்பட உள்ளன. ஆன்லைனில் மின்வாரியம் கேட்கும் விவரங்களை உரிய கட்டணத்துடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து அடுத்த 10 நாட்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மின் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதனால் தேவையற்ற காலவிரயம் மற்றும் பிற சர்ச்சைகள் ஏற்படாது.

Tags : Smart Meter
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!