×

நீடாமங்கலம் ஒன்றியம் அதங்குடி- பொதக்குடி இடையே வெண்ணாற்றின் குறுக்கே ஆமை வேகத்தில் பாலப்பணி: விரைந்து முடிக்க கோரிக்கை

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் அதங்குடி- பொதக்குடி இடையே வெண்ணாற்றில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் அதங்குடி-பொதக்குடி இடையே வெண்ணாற்றில் இருந்த பாலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கம்பிகள் இல்லாமல் இருந்து வந்தது. இந்த பாலத்தின் வழியாக அதங்குடி, வெள்ளக்குடி, விழல்கோட்டகம், கருவேலங்குலம்,பொதக்குடி, அகரபொதக்குடி, சேகரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த பாலம் வழியாக வந்துதான் பொதக்குடி வந்து அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளிலும் மற்றும் அங்கிருந்து மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று படித்து வருகின்றனர். அது மட்டுமின்றி அதே பகுதிகளில் உள்ள மக்கள் பொதக்குடி வந்து அங்குள்ள வங்கிகளுக்கும், மருத்துவமனை, கால்நடை மருத்துவமனைகளுக்கு வந்து சென்றனர்.

பாலம் மிகவும் மோசமான நிலையில் கம்பிகள் இல்லாமல் இருந்ததாலும், இந்த பாலத்திலிருந்து இரண்டு பேர் கீழே ஆற்றில் விழுந்து பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் மாடுகள் விழுந்தும் இறந்துள்ளது. அவசரத்திற்குகூட ஆம்புலன்ஸ் செல்லமுடியாத அளவிற்கு இந்த பலம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.இந்த செய்தி தினகரன் நாளிதழில் மூன்று முறை வெளியானது.செய்தியை அறிந்த அதிகாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அதங்குடி பொதக்குடி இடையே வெண்ணாற்றில் பாலம் கட்டும் பணியை தொடங்கினர். அந்த பாலத்தை இடித்து விட்டு அருகில் பொது மக்கள்,பள்ளி கல்லூரி மாணவர்கள் செல்வதற்காக மூங்கில் பாலம் ஒன்று அமைத்திருந்தனர். தற்போது அந்த மூங்கில் பாலமும் மூன்று முறை உடைந்து கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த பாலம் உடைந்த நிலையில் சைக்கிள்களை கூட மாணவர்கள் ஓட்டிச்செல்ல முடியாத அவல நிலையில் மோசமான மூங்கில் பாலமாக உள்ளது மேலும் மூன்று ஆண்டுகளாக தொடங்கப்பட்ட பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடை பெற்று வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதி மாணவ, மாணவிகள், பொது மக்கள் நலன்கருதி பாலம் கட்டும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என பொதக்குடி தமுமுக கிளை தலைவர் சாகுலமீது,செயலாளர் சாகுலமீது கோரிக்கை விடுத்துள்ளனர்.

* பாலம் மிகவும் மோசமான நிலையில் கம்பிகள் இல்லாமல் இருந்ததாலும், இந்த பாலத்திலிருந்து இரண்டு பேர் கீழே ஆற்றில் விழுந்து பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் மாடுகள் விழுந்தும் இறந்துள்ளது. அவசரத்திற்குகூட ஆம்புலன்ஸ் செல்லமுடியாத அளவிற்கு இந்த பலம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

Tags : Needamangalam Union Atangudi ,Turtle Speed Bridge , Nedamangalam Union,Atangudi, Pottakudi,Turtle Speed Bridge
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!