×

சிதம்பரத்தில் சுற்றுலா துறை சார்பில் தங்கும் விடுதிகள் கட்டும் பணி தீவிரம்

சிதம்பரம: சிதம்பரம் நகரம் மிகச் சிறந்த சுற்றுலா நகரமாக உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில், தில்லை காளி கோயில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளதால் இது ஆன்மிக நகரமாகவும் விளங்குகிறது. இதுதவிர சிதம்பரத்திற்கு அருகே உள்ள சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு போன்ற பகுதிகளில் நவகிரக கோயில்கள் உள்ளன. இதனால் சிதம்பரத்திற்கு வந்து தங்கி கோயில்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகம்.
இதுபோல சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் உலக பிரசித்தி பெற்ற சுரபுன்னை காடுகளை கொண்ட பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இதனால்தான் கடலூர் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலகம் சிதம்பரத்தில் இயங்கி வருகிறது. சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரில் புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளதால் கல்வி பணிகளுக்காகவும் ஏராளமானோர் இங்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சிதம்பரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ஓட்டல் மற்றும் விடுதிகள் செயல்பட்டு வந்தது. நாளடைவில் அது பழுதடைந்ததால் மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சுமார் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் ஓட்டலுடன் கூடிய அறைகளை கொண்ட விடுதி கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஏற்கனவே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான ஓட்டல் மற்றும் விடுதி இருந்தது. சில ஆண்டுகளாக இதை தனியார் ஓட்டல் நிர்வாகத்தினர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். ஆனால் போதிய வருவாய் இல்லாததால் இந்த விடுதி மற்றும் ஓட்டல் மூடப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே சிதம்பரத்தில் புதிதாக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஓட்டல் மற்றும் அறைகளுடன் கூடிய விடுதியை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே சுற்றுலா ஓட்டல் இருந்த இடத்தில் அதை இடித்து விட்டு புதிதாக தற்போது பணிகள் துவங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரில் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை அருகில் உள்ள சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் இந்த விடுதி மற்றும் ஓட்டல் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக முதல் கட்ட பணிகள் துவங்கியுள்ளது.கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், சுமார் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் ஓட்டல் மற்றும் அறைகள் கொண்ட விடுதியுடன் இந்த கட்டிடம் உருவாகிறது. தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்துடன் நவீன வசதிகளோடு இந்த விடுதி கட்டப்பட்டு வருகிறது.

இதுதவிர சுற்றுலாத்துறை அலுவலகமும் தனியே கட்டப்பட உள்ளது. சிதம்பரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் ஓட்டல்களில் தங்க வேண்டி உள்ளது. அதனால் இந்த சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் விடுதி மற்றும் ஓட்டலை உடனடியாக கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : hotels ,Chidambaram , Construction ,hotels ,Chidambaram ,behalf ,tourism industry
× RELATED சூறைக்காற்று மற்றும் புயல்...