×

மானாமதுரையில் குப்பைகளை தரம்பிரிக்காமல் தீ வைப்பு: புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அவதி

மானாமதுரை: மானாமதுரை பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என்று தரம்பிரிக்காமல் அப்படியே தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல் ஏற்பட்டு தடுமாற்றம் அடைகின்றனர். மானாமதுரை பேரூராட்சியின் மூலம் 18 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் உரக்கிடங்கு மாங்குளம் அருகே தாயமங்கலம் ரோட்டில் உள்ளது. நகர்ப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் காய்கறி கழிவுகள், உணவுக்கழிவுகள், மக்கும் குப்பைகள், மக்காத பிளாஸ்டிக் வகை குப்பைகளை தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் குப்பைகளை தரம் பிரித்து சிறப்பான முறையில் கையாளும் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினருக்கு தங்கக்காசும், அதேபோல் உரியமுறையில் குப்பைகளை பிரித்து வாங்கும் பணியாளர்களுக்கு தங்கக்காசும், சிறப்பான முறையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு 75 சதவீதத்திற்கு மேல் குப்பைகள் தரம் பிரித்து பெறும் கண்காணிப்பு அலுவலர்களுக்கு தங்கக்காசும், அதேபோல் தரம் பிரித்த குப்பைகளை சரியான முறையில் வாகனத்தில் ஏற்றி வாகன கிடங்கிற்கு கொண்டு வரும் வாகன ஓட்டுநருக்கு தங்கக்காசு வழங்க அப்போதைய கலெக்டர் லதா உத்தரவிட்டார். ஆனால் அதன்பின் வந்த அதிகாரிகள் இதனை நடைமுறைப்படுத்தவில்லை.  

பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தகவல் தெரிவித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் விட்டுவிட்டனர். அதேபோல் கடைகளில் கட்டாயம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்திட அறிவுறுத்தியும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில் மீன், கோழி, ஆட்டிறைச்சி கடைகளில் தாராளமான பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நகரில் தினசரி சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்காமல் மாங்குளம் குப்பைக்கிடங்கில் பணியாளர்கள் அப்படியே தீ வைத்து எரித்து வருகின்றனர். இதனால் தாயமங்கலம் ரோட்டில் செல்லும் வாகனஓட்டிகள் கண் எரிச்சல் ஏற்பட்டு தடுமாற்றம் அடைகின்றனர். இதனால் விபத்து அபாயம் நிலவுவதாக அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் புகார்
தெரிவிக்கின்றனர்.

சுற்றுச்சூழல் மாசு
இது குறித்து நவத்தாவு கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ், பழனி கூறுகையில், மாங்குளம், நவத்தாவு, சன்னதிபுதுக்குளம் கிராமங்களை சேர்ந்த பலர் தாயமங்கலம் ரோட்டில் சென்று வருகின்றனர். பேரூராட்சியினர் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்காமல் அப்படியே தீ வைத்து எரிக்கின்றனர். குப்பைகளில் எழும் புகை ரோட்டை மறைக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் கண் எரிச்சல் ஏற்படுவதாலும், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை இங்கு தீ வைத்து எரிப்பதற்கு பதிலாக தரம்பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுமாறு சுத்திகரிக்க வேண்டும் என்றனர்.

Tags : Manamadurai ,Motorists , Fire ,Manamadurai,garbage quality,Motorists suffering,smoke zone
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்