×

நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போடுவதில் மீண்டும் புதிய சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் சீராய்வு மனு

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் 4வது குற்றவாளியான பவன் குமார் குப்தா, உச்ச நீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான். இதனால், மார்ச் 3ம் தேதியும் இந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் தண்டனையை நிறைவேற்ற ஏற்கனவே 2 முறை தேதி அறிவிக்கப்பட்டும், நிறைவேற்ற முடியாமல் போனது. காரணம், குற்றவாளிகள் 4 பேரும் கருணை மனு, சீராய்வு மனு என மாறி மாறி தாக்கல் செய்து வருகின்றனர். தற்போது கூட, மார்ச் 3ம் தேதி தண்டனையை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் 4வது குற்றவாளியான பவன் குமார் குப்தா, உச்ச நீதிமன்றத்தில் நேற்று திடீரென சீராய்வு மனு தாக்கல் செய்தான். அதில், ‘குற்றம் நடந்தபோது நான் சிறுவனாக இருந்தேன்.

அதன் அடிப்படையில்தான் எனக்கு தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். அதனால், இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும்,’ என கூறியுள்ளான்.
 இந்த மனுவை அவசர வழக்காக வரும் திங்கட்கிழமை விசாரித்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும், அடுத்த வாய்ப்பாக ஜனாதிபதிக்கு அவன் கருணை மனு அனுப்பக்கூடும். அதனால், மார்ச். 3ம் தேதியும் குற்றவாளிகளுக்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Tags : Pawan Kumar ,Supreme Court Supreme Court , Nirbhaya is guilty, hanging, Supreme Court, Pawan Kumar
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கு அமலாக்கத்துறை ஆபீசில் பவன்குமார் பன்சால் ஆஜர்