×

ரஞ்சி அரை இறுதி இன்று தொடக்கம்

ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன்கள் மோதும் அரை இறுதிப் போட்டிகள் இன்று ராஜ்கோட், கொல்கத்தாவில் தொடங்குகிறது. குஜராத் மாநிலம்  ராஜ்கோட்டில் நடைபெறும் முதல் அரை இறுதியில் குஜராத்-சவுராஷ்டிரா அணிகள்  மோதுகின்றன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறும் 2வது  அரையிறுதியில் பெங்கால்-கர்நாடகா அணிகள் விளையாடுகின்றன. இந்த 4 அணிகளும் ஏற்கனவே ரஞ்சி கோப்பையை வென்ற முன்னாள்  சாம்பியன்கள். இதில் கர்நாடகா 8 முறையும், பெங்கால், சவுராஷ்டிரா தலா  2 முறையும், குஜராத் ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன. இந்த 4 அணிகளும் மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்ல முனைப்புக் காட்டும் என்பதால் 2 போட்டிகளும் விறுவிறுப்பாகவே இருக்கும்.

கர்நாடகா அணியில் மீண்டும் லோகேஷ் ராகுல் இணைவது அந்த அணிக்கு  கூடுதல் பலமாக இருக்கும். அந்த அணியில் கிருஷ்ணப்பா, கேப்டன் கருண்  நாயர், தேவ்தூத், சித்தார்த், மிதுன், ஷ்ரேயாஸ் கோபால், சீனிவாஸ் சரத் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பெங்கால் அணியிலும் மூத்த வீரர் மனோஜ் திவாரி, கேப்டன் ஈஸ்வரன், அபிஷேக் ஆகியோர் நெருக்கடி தருவார்கள். குஜராத் அணியின்  கேப்டன் பார்த்திவ் பட்டேல், சிராக், அக்சர்,  பிரியங்க், பியூஷ், தேஜஸ் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது பலம். அதன் எதிரணியான சவுராஷ்டிரா  அணியிலும் உனத்கட், சிராக் ஜானி, தர்மேந்திரசிங், ஸ்நெல், பிரேரக் அதிரடியாக விளையாடி வருவதால் இறுதிப்போட்டிக்கு முந்த  முனைப்பு காட்டுவார்கள். இறுதிப் போட்டி மார்ச் 9ம் தேதி தொடங்க உள்ளது.

Tags : Ranji Semi-Final , Ranji Semi-Final
× RELATED ஹங்கேரியில் ரசிகர்களுடன் மீண்டும் கால்பந்து போட்டி.