×

தீவிரவாதிகளுக்கு எல்லைக்கு அப்பாலும் பாதுகாப்பு கிடையாது: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘‘எல்லைக்கு அப்பால் உள்ள பகுதிகளையும் தீவிரவாதிகள் பாதுகாப்பான புகலிடமாக பயன்படுத்த முடியாது என்பதை பாலக்கோடு விமான தாக்குதல் காட்டியுள்ளது,’ என பதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பதிலடியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி முகாமை தாக்கி அழித்தது. இந்நிலையில், `போரில்லா சூழ்நிலையில் விமானப்படையின் பங்கு’ என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது, புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார். மேலும் பாலக்கோடு பகுதியில் விமான தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களையும் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்ய தயாராவதை விட,  இந்திய நிலப்பகுதி, வான்வெளி, கடற்பகுதியில் எல்லா நேரத்திலும் நம்பகமான தடுப்பு பணியில் ஈடுபடுவது மிக முக்கியம். பாலக்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல், எல்லைக்கு அப்பாலும் தீவிரவாதிகள் பாதுகாப்பான புகலிடங்களை  பயன்படுத்த முடியாது என்பதை உணர்த்தியுள்ளது. இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் தொடுப்பது பாகிஸ்தானுக்கு மிக விருப்பமான செயலாக உள்ளது. பாலக்கோடு தாக்குதல் மூலம் அதற்கு பாடம் கற்பித்துள்ளோம்.  கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் பாதுகாப்பு சூழ்நிலை மாறியுள்ளது. கார்கில் போர் போன்ற சம்பவங்கள் புதுவகை போருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் பேசிய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ரவாத், ‘`பாலக்கோடு தாக்குதல் ஒருவகையான பினாமி போர் என்பதை உணர்த்தி  உள்ளோம்,’’ என்றார்.

Tags : Terrorists ,Rajnath Singh , Terrorists, border security, Rajnath Singh
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...