×

‘இங்கு கபாலீஸ்வரர் கோயில் இருந்தது’ சாந்தோம் தேவாலயத்தில் நுழைந்து சர்ச்சை கிளப்பிய அர்ஜூன் சம்பத் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு

சென்னை: சென்னை சாந்தோம் தேவாலயத்திற்குள் நுழைந்து இந்து கோயில் இருந்த இடம் என்று கூறி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி சர்ச்சையை கிளப்பி  உள்ளார். இதையடுத்து 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த 2 மாதமாக போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து 15 நாளாக இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மிகவும் பழமை வாய்ந்த சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் தேவாலயத்திற்கு நேற்று காலை சென்றுள்ளார்.  பின்னர் தேவாலய ஊழியர்களிடம், ‘‘இங்குள்ள அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும். அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் கோயிலில் இருந்த பொருட்கள் என சொல்கிறார்கள். எனவே நான் அதை பார்க்க வேண்டும். உங்கள் பாதிரியாரை கூப்பிடுங்கள். நான் பேச வேண்டும்’’ என்று கூறியுள்ளார். மேலும், ‘‘தேவாலயம் கட்டுவதற்கு முன்பு இங்கு கபாலீஸ்வரர் கோயில் இருந்தது. அந்த இடத்தில் தான் தற்போது தேவாலயம் உள்ளது’’ என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அருங்காட்சியகம் மூடப்பட்டு இருந்ததால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் திடீரென சந்தோம் தேவாலயத்திற்குள் வந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் தேவாலயத்திற்கு வழிபாடு செய்ய வந்தவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தேவாலய ஊழியர்கள் வாய் மொழியாக புகாரளித்துள்ளனர். அதன்பேரில் 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : church ,Arjun Sampath ,Santom ,Santhome Church , Kapaleeswarar Temple, Arjun Sampath, Police
× RELATED திசையன்விளை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி