×

வாலிபர் கொலையில் 5 பேர் கைது: இளம்பெண் உள்பட இருவருக்கு வலை

பெரம்பூர்:  குடும்ப தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.  எண்ணூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் தயாளன் (26). இவருக்கு, திவ்யா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தயாளனின் அண்ணன் சந்துரு, எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். சந்துருவின் மனைவி தாரணி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், தனுஷ் என்பவரை தாரணி இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு, அடிக்கடி அதே பகுதியில் உள்ள தாரணி வீட்டுக்கு சென்று, தான் வாங்கி கொடுத்த நகைகளை கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், தாரணி நகைகளை தர மறுத்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தயாளன், அண்ணன் சந்துரு வீட்டிற்கு சென்றபோது, சந்துரு நடந்த விஷயத்தை கூறி அழுதுள்ளார். உடனே, தயாளன் கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அன்னை இந்திரா காந்தி நகரில் உள்ள தாரணி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தாரணி மற்றும் அவரின் அப்பா சுகுமாரன், 2வது கணவர் தனுஷ் மற்றும் சிலர் இருந்துள்ளனர்.

அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தயாளன், ‘‘என் அண்ணன் வாங்கி தந்த நகைகளை உடனே திருப்பி கொடு. இல்லாவிட்டால் நடப்பதே வேறு,’’ என்று தாரணியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, தாரணியின் உறவினர்கள் திரண்டு தயாளனை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆத்திரம் தீராத தாரணியின் தந்தை சுகுமாரன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து, தயாளனை சரமாரி குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தயாளன் சம்பவ இடத்திலேயே பலியானார்.  இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாரணியின் தந்தை சுகுமார் (48), தாரணியின் 2வது கணவர் தனுஷ் (26), சுகுமாரின் நண்பர்களான திருவிக நகர் பகுதியை சேர்ந்த திருமலை (37), வினோத் (28), சுரேஷ் (30) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தாரணி மற்றும் தாரணியின் தாய் ஜெயலட்சுமி ஆகியோரை தேடி வருகின்றனர்.Tags : 5 arrested , youth murder case
× RELATED கொரோனாவுக்கு 5 பேர் பலி