×

முதல்வர் எடப்பாடியுடன் எல்.கே.சுதீஷ் திடீர் சந்திப்பு: மாநிலங்களவை எம்பி சீட் கேட்டார்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் ஒதுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக, திமுக சார்பில் தலா 3  மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிட வருகிற மார்ச் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, மார்ச் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரமே உள்ளதால், அதிமுக சார்பில் 3  மாநிலங்களவை எம்பி பதவியை பிடிக்க அதிமுக கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளும் எம்பி சீட் கேட்கிறது.

இதுபற்றி 3 நாட்களுக்கு முன், திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, “அதிமுகவில் மூத்த உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.  அவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்” என்றார். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு  வழங்கும் முடிவு அதிமுக தலைமைக்கு இல்லை என்றே கருதப்பட்டது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 3 நாட்களுக்கு முன் சென்னையில் பேட்டி அளித்தபோது, “அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்தபோது மாநிலங்களவை எம்பி சீட் கேட்டோம். பின்னர்  பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி உறுதி அளித்தார். நாங்கள் கூட்டணி தர்மத்தை மதிக்கிறோம். அதிமுக கட்சி தலைமையும் கூட்டணி தர்மத்தை மதித்து தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும்” என்றார். இதே கருத்தை  நேற்றும் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக துணை செயலாளரும் பிரேமலதா விஜயகாந்தின் தம்பியுமான எல்.கே.சுதீஷ் நேற்று மாலை திடீரென சந்தித்து  பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்தது.அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி சீட்டில் 3 சீட் அதிமுகவுக்கு கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மக்களவை தேர்தல் கூட்டணியின்போது பேசியபடி தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை  சீட் தற்போது தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி முதல்வர் எடப்பாடி, உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதுபற்றி அதிமுக கட்சியின் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்து அறிவிக்கிறேன் என்று சுதீஷிடம் கூறியுள்ளார். அதிமுக தரப்பில் இருந்து தேமுதிகவுக்கு ஒரு சீட் கிடைக்குமா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும். அப்படி தேமுதிகவுக்கு சீட் வழங்காவிட்டால் வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியில்  இருந்து வெளியேறவும் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Edappadi ,LK Sudheesh ,meeting , LK Sudheesh's sudden meeting with Chief Minister Edappadi
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்