×

களியக்காவிளையில் சுட்டு கொல்லப்பட்ட எஸ்எஸ்ஐ வில்சன் மகளுக்கு வருவாய்த்துறையில் பணி

நாகர்கோவில்: களியக்காவிளையில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ.  வில்சன், மகளுக்கு குமரி மாவட்ட வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் (57) சுட்டுக் கொல்லப்பட்டார். வில்சன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரண நிதி  வழங்கியது. அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி வில்சனின் மகள் ஆன்றீஸ் ரினிஜாவுக்கு (27), குமரி மாவட்ட  வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பணி நியமன ஆணையை நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், ஆன்றீஸ் ரினிஜாவிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,  எஸ்.பி. நாத், குமரி மாவட்ட பால்வள தலைவர் அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு சங்க தலைவர் ஜாண்தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆன்றீஸ் ரினிஜா எம்.இ. பட்டதாரி ஆவார். இவரது கணவர் ஜெர்வின். இவர்களுக்கு ஜெர்சிமா (2) என்ற மகள் உள்ளார். இவர்கள் மார்த்தாண்டம் பருத்திவிளை பகுதியில் வசித்து வருகின்றனர். இதுகுறித்து ஆன்றீஸ் ரினிஜா கூறுகையில்,  நிதியுதவி அளித்ததுடன் அரசு வேலை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், குமரி மாவட்ட கலெக்டர், எஸ்.பி. மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Tags : SSI Wilson ,Kaliyakkavil SSI Wilson , SSI Wilson daughter shot dead in Kaliyakkavil
× RELATED களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சன்...