×

ஆரோவில் சர்வதேச நகரின் 52வது உதய தினவிழா: நெருப்பு மூட்டி வரவேற்ற வெளிநாட்டினர்

வானூர்: ஆரோவில்லில் நேற்று அதிகாலை 52வது உதய தினம் கொண்டாடப்பட்டது. இதனை வெளிநாட்டினர் மற்றும் ஆரோவில் வாசிகள் நெருப்பு மூட்டி வரவேற்றனர். தியானத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை என்று அழைக்கப்படும் மீரா அல்போன்ஸாவின் முக்கிய கனவு நகரமாக விழுப்புரம் மாவட்டத்தில் இரும்பை, இடையன்சாவடி, பொம்மையார்பாளையம், குயிலாப்பாளையம், கோட்டக்கரை உள்ளிட்ட  பகுதிகளின் மையத்தில் ஆரோவில் அமைய வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி கடந்த 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் மையம் அமைக்கப்பட்டது. இதன் முக்கிய இடமாக மாத்ரி மந்திர் தியானக்கூடம் அமைக்கப்பட்டது.  மேலும் பாரத் நிவாஸ், அரவிந்தர் சிலை நிறுவப்பட்டுள்ள சாவித்திரி பவன் ஆகியவையும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டது. மாத்ரி மந்திர் அருகே ஆம்பி தியேட்டர் எனப்படும் திறந்தவெளி கலையரங்கம் உலக நாட்டின் அனைத்து  பகுதிகளிலிருந்தும் மண் மற்றும் செங்கற்கள் எடுத்து வரப்பட்டு கட்டப்பட்டது.

ஆரோவில் மையம் உதயமாகி 52 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி நேற்று அதிகாலை 5 மணியளவில் 52வது உதய தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆம்பி தியேட்டர் எனப்படும் திறந்தவெளி கலையரங்கில் நேற்று அதிகாலை 5  மணியளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் ஆரோவில் வாசிகள் கூடினர். பின்னர் சூரிய உதயத்தின் போது அப்பகுதியில் நெருப்பு மூட்டி தியானத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆம்பி தியேட்டர் முழுவதும் வண்ண மலர்களால்  அலங்கரிக்கப்பட்டது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

Tags : Foreigners ,Auroville International City , Foreigners welcomed by fire in Auroville International City's 52nd morning
× RELATED சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400...