×

மாநிலங்களவைக்கு போட்டியிடுபவர்கள் பேரவை செயலாளரிடம் மனுதாக்கல் செய்ய வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 6ம் தேதி முதல் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல்  அதிகாரி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைதொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்  கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் அறிவிக்கை மார்ச் 6ம் தேதி (வெள்ளி) வெளியிடப்படும். அன்றைய தினத்தில் இருந்து வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13ம் தேதி.  
 
மார்ச் 16ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் 18.3.2020. வாக்குப்பதிவு நாள்    26.3.2020. வாக்குப்பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. அன்றைய  தினம் மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.  இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரை (பாலசுப்பிரமணியம்) உதவி தேர்தல் நடத்தும்  அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.

வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமை செயலகத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் மார்ச் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை காலை 11  மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். மார்ச் 8ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் அன்றைய தினம் மனு தாக்கல் செய்ய முடியாது. வாக்குப்பதிவு தேவைப்படின், `சட்டமன்ற குழுக்கள் அறையில்’ மார்ச்  26ம் தேதி அன்று நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Election Officer ,Rajya Sabha ,Council ,Tamil Nadu , Those contesting for the Rajya Sabha should file a petition with the Secretary of the Council: Chief Election Officer of Tamil Nadu
× RELATED தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி