×

டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதி: ஐகோர்ட்டில் வக்கீல் தகவல்

சென்னை:  மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2015ல் நடத்திய (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரரின் புகார் குறித்து விசாரிக்குமாறு தமிழக போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., ஊழியர்கள் உள்பட 6 பேரை  போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் நேற்று நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன்  ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிடும்போது, ‘‘குரூப் 1 தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளின் உதவியுடன் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மோசடி நடந்துள்ளது.  டிஎன்பிஎஸ்சியின் தலைவருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்புண்டு.

மனித நேய அறக்கட்டளையும், அப்போலோ பயிற்சி மையமும் விடைத்தாள்களை திருத்தியுள்ளது. இது டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்திருக்காது.  குரூப் 1ல் தேர்வான 74 பேரில் 62 பேர் ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி  பெற்றவர்கள். இதை மாநில போலீஸ் விசாரித்தால் உண்மைகள் மறைக்கப்படும். விடைத்தாள்களை தயாரிப்பவர்களின் தொலைபேசி எண்கள் டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் கட்டுப்பாட்டாளருக்கு மட்டுமே தெரியும். அந்த எண் எப்படி முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தெரிந்தது?. இதில் மிகப்பெரிய சதி மற்றும் முறைகேடு  நடந்து உள்ளது. எனவே, இதை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

 அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘இந்த வழக்கு தொடர்பாக போலீசாரின் விசாரணை முடிந்து விட்டது.  விசாரணை  தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.  அப்போது, டிஎன்பிஎஸ்சி, தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன்,‘குரூப் 1 தேர்வு தொடர்பாக ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி, சட்டப்பூர்வமாக நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட டிஎன்பிஎஸ்சி, ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு  ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசின் முன் அனுமதி தேவை.

அந்த அனுமதியை அரசு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார். இந்த வாதங்களை கேட்ட  நீதிபதிகள், ‘‘சிபிஐ விசாரணை கோரி திமுக தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ, தமிழக அரசு, டிஎன்பிஎஸ்சி ஆகியவை பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 6ம் தேதிக்கு’’ தள்ளிவைத்தனர்.

Tags : IcordTienpiesci Government ,Tienpiesci , Tienpiesci Government sanction to file chargesheet against employees: Advocate information in Icord
× RELATED டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு தொடர்பாக மேலும் 3 பேர் கைது