×

பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடு செய்யும் மாணவர்கள் 5 ஆண்டுகள் தேர்வு எழுத தடை: 16 வகையான தண்டனையும் அறிவிப்பு

சென்னை: பொதுத்தேர்வின் போது முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக 16 வகையான தண்டனைகள் வழங்குவது குறித்த  பட்டியலையும் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் குறைந்த பட்சம் 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட 3 வகுப்புகளுக்கான  தேர்வுகளில் 25 லட்சத்து 87 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

இந்நிலையில், தேர்வின்போது தேர்வு அறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்வுக் கண்காணிப்பாளர்களுக்கு சில விதிகளை தேர்வுத்துறை  அனுப்பியுள்ளது. அதில் 16 வகையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி, தேர்வு எழுதும்போது துண்டுச் சீட்டுகள் வைத்திருத்தல், புத்தகங்கள் வைத்திருப்பது கண்டுபிடித்தால் அவர்கள் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அடுத்த மாணவரை பார்த்து  எழுதினாலோ, வெளியில் இருந்து  யாராவது உதவி செய்தாலோ அந்த மாணவர்களிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி வாங்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் அந்த தேர்வு எழுத முடியாது. மேலும் ஒரு ஆண்டுக்கு தேர்வு எழுத முடியாது.

தேர்வு அறையில் துண்டு சீட்டுகளை மறைத்து வைத்து பார்த்து எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் அடுத்தடுத்து நடக்கும் 2 தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவார்கள். ேதர்வு அறை கண்காணிப்பாளர்கள் உதவியுடன் ஒழுங்கீனச்  செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், குறிப்பாக குறிப்பிட்ட காலத்துக்கு அவர்கள் தேர்வு எழுத முடியாமல் தடை செய்யப்படுவார்கள்.  ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் தேர்வு எழுதுவதில்  இருந்து நிரந்தரமாக தடை செய்யப்படுவார்கள். விடைத்தாள் மாற்றம் செய்தால் தேர்வு எழுதுவதில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்கு தடை செய்யப்படுவார்கள்.

விடைத்தாள் மாற்றுவது, கேள்வித்தாளை எடுத்து செல்வது, கேள்வித்தாளை வெளியில் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை செய்யப்படுவார்கள். விடைத்தாளில் ரகசிய குறியீடுகள் எழுதுவது,  சந்தேக எழுத்துகளில் எழுதினாலும் பதிவு எண்களை மாற்றுவது, விடைத்தாள் திருத்த முறைகேடுகளில் ஈடுபட்டால் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுவார்கள். அருகில் உள்ள மாணவர்களுக்கு விடைகளை எழுதிக் கொடுத்தால், அவர்கள்  குறிப்பிட்ட தேர்வில் இருந்து  விலக்கி வைக்கப்படுவார்கள்.

Tags : Elections ,10th Class General Elections Plus Two , Plus Two, Plus 1 and 10th Grade 5 Elections 16 types of penalty notice
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...