காசிமேடு பகுதியில் அடுத்தடுத்து 2 ரவுடிகள் கொலை: இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்: கூடுதல் கமிஷனர் உத்தரவு

சென்னை: காசிமேடு பகுதியில் நடந்த தொடர் கொலையை தடுக்காத, சட்டம் ஒழுங்கை பாதுகாக்காத இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, காசிமேடு இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் குப்பன் என்ற சொரி குப்பன் (55), பிரபல ரவுடி. இவர், கடந்த வாரம் 4 பேர் கும்பலால் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இதனிடையே, ரவுடி குப்பன் கொலை சம்பவம் நடந்து 4 நாட்களில் காசிமேடு, சிங்கார வேலன் நகரை சேர்ந்த பிரபல ரவுடி திவாகர் (28) என்பவர் 8 பேர் கும்பலால் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

 

இதுதொடர்பாக 6 பேர் காசிமேடு காவல்நிலையத்தில் நேற்றுமுன்தினம் சரணடைந்தனர். விசாரணைக்கு பிறகு  6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி  இணையதளத்தில் வைரலாக பரவியது.  இது பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில், காசிமேடு பகுதியில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவத்தை தடுக்க முடியாமல் இருப்பதாகவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்காமல் மெத்தனமாக செயல்பட்டதாகவும் காசிமேடு இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் மீது புகார்  எழுந்தது. இதையடுத்து, சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் தினகரன் உத்தரவின்பேரில், நேற்று காலை இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>