×

சார்பதிவாளர் அலுவலகங்களில் புரோக்கர்கள் நுழைய தடை: நாளை முதல் அமல்

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவண எழுத்தர் மற்றும் நிலத்தரகர்களை நாளை முதல் அனுமதிக்கக்கூடாது என்று பதிவுத்துறை ஐஜி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி அனைத்து துணை பதிவுத்துறை தலைவர், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவண எழுத்தர் மற்றும் நிலத்தரகர்களை அனுமதிக்கக்கூடாது. ஆவண எழுத்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் ஆவண எழுத்தர்கள் மீதான புகார்கள் தொடர்ந்து  பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு வந்த வண்ணம் உள்ளது.

எனவே, சுற்றறிக்கைகளை தவறாது சார்நிலை அலுவலர்கள் பின்பற்ற வேண்டும். ஆவண எழுத்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறகைளில் ஒன்றாக ரசீது புத்தகம் பராமரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால்,  பொதுமக்களுக்கு ஆவண எழுத்தர்களால் ஆவணம் தயாரிப்பதற்கான கட்டண ரசீது வழங்கப்படுவதில்லை என புகார்கள் வருகின்றன. எனவே, அனைத்து ஆவண எழுத்தர்களும் தங்களால் தயாரிக்கப்படும் ஆவணங்களுக்கான கட்டண ரசீதினை  ஆவணதாரர்களுக்கு தவறாது வழங்க வேண்டும்.

கட்டண ரசீதுடன் ஆவணம் தாக்கல் செய்யப்படுவதை பதிவு அலுவலர்கள் உறுதி செய்து ஆவண பதிவை மேற்கொள்ள வேண்டும். மேலும் கட்டண ரசீதினை குறிப்பு ஆவணமாக அந்தந்த ஆவணங்களுடன் ஒளிவருடல் செய்யவும், அலுவலக  கோப்பில் கோர்த்து பராமரிக்கவும் சார்பதிவாளர்கள் கோரப்படுகிறார்கள். இந்த நடைமுறை மார்ச் 1ம் தேதி(நாளை) முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : brokers ,dependents offices , Prohibition of entry of brokers in dependents offices: effective from tomorrow
× RELATED வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில்...