×

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் வரத்தை தடுக்க வேண்டும்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல் வரத்தை தடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ) சிற்றரசு, கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெயராமன், வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார், உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது: சேதுராமன் : கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுபாடு இருந்து வருகிறது. இதன் காரணமாக கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒருசில கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல்கள் கொள்முதலுக்கு வந்த வண்ணம் இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஆண்டிற்கான தூர்வாரும் பணியை அடுத்த மாதமே துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தம்புசாமி: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசின் அறிவிப்பில் திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களையும் இணைக்க வேண்டும். ஏற்கனவே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா : பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பினை முழுமையாக செயல்படுத்தப்படுத்த வேண்டும். ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதால் அதனை சரி செய்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பயிர் காப்பீட்டு தொகை என்பது விவசாயிகளுக்கு சரிவர கிடைக்காமல் தாமத படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காப்பீட்டு நிறுவனத்தின் மெத்தனப்போக்கே காரணமாகும். இதனை கண்டித்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மேலும் திருவாரூர் -காரைக்குடி ரயில் மார்க்கத்தில் ரயில் சேவையினை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிவில் பேசிய கலெக்டர் ஆனந்த் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 12 ஆயிரத்து 686 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரையில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 387 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 85 ஆயிரத்து 280 விவசாயிகளுக்கு ரூ.652 கோடியே 74 லட்சத்து 38 ஆயிரத்து 138 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் நிலையம் தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags : rice procurement centers ,paddy procurement centers , At direct paddy procurement centers Prevent external paddy flow
× RELATED லத்தூர் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல்...