×

காஞ்சிபுரம் சரவண பவன் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை: விசாரணை நடத்த வேண்டுமென ஊழியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரத்தில் சரவண பவன் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சரவண பவன் உணவகத்தின் 3 கிளைகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக, ஊழியர்களுக்கு சரவண பவன் நிர்வாகம் சரியாக சம்பளம் கொடுக்கவில்லை. இதையடுத்து, பழனியப்பன் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேசியுள்ளார். தற்போது நிர்வாகத்தில் சில பிரச்னைகள் இருப்பதால், சம்பளம் கொடுக்க முடியவில்லை. அடுத்த மாதம் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என நிர்வாகத்தினர் பழனியப்பனிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதை ஊழியர்களிடம் பழனியப்பன் தெரிவித்திருக்கிறார். ஊழியர்கள், பழனியப்பன் சொல்வதை ஏற்காமல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். போராட்டத்தைத் தடுப்பதற்காக,  600 ஊழியர்களுக்கும் கொடுக்கவேண்டிய சம்பளத்தொகையில் முன்பணமாக 5000 ரூபாய் கொடுத்திருக்கிறார். முன்பணம் கொடுத்ததையடுத்து, சென்னை வடபழனியில் இருக்கும் தலைமை அலுவலகத்திலிருந்து பழனியப்பனை நேரில் அழைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் இருக்கிறார்கள். மனமுடைந்த பழனியப்பன், இரவு முழுவதும் தூங்காமல், செல்போன் மூலமாகத் தன் மனக்குமுறல்களை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அதிகாலையிலேயே பணிக்கு வரும் பழனியப்பன் வராததால், ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டனர். பதில் அளிக்காத காரணத்தினால், சில ஊழியர்கள் வீட்டுக்குச் சென்றனர், அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள 3 சரவண பவன் ஊழியர்களும் பணியை புறக்கணிப்பு செய்து, காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள சரவண பவன் உணவகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த பழனியப்பன் குடுப்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும், இரண்டு மாத சம்பள பாக்கியை உடனே கொடுக்க வேண்டும் மேலும் சரவண பவன் உரிமையாளர், நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளோடு ஊழியர்கள் போராட்டத்தைத் நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Tags : manager ,Kanchipuram Saravanan Pawan ,suicide ,Saravana Pawan ,Kanchipuram , Kanchipuram Saravanan Pawan's manager commits suicide
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்