×

விபத்தில் 2 பேர் பலியானதை கண்டித்து கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

சென்னை: விபத்தில் 2 பேர் இறந்ததை கண்டித்து பொதுமக்கள் கல் குவாரி லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்பாக்கம் அருகே கூவத்தூரில் இருந்து பவுஞ்சூர் நோக்கி நேற்று முன்தினம் மதியம் ஒரு ஷேர் ஆட்டோ புறப்பட்டது. டிரைவர் செல்வம் (28) ஆட்டோவை ஓட்டினார். அதில், ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த தணிகைவேல் (33) உள்பட 5 பேர் பயணம் செய்தனர்.  கிழக்கு கடற்கரை சாலை கண்டிகை அருகே சென்றபோது, எதிரே கல்குவாரியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த ஒரு லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் டிரைவர் செல்வம், பயணி தணிகைவேல் ஆகியோர் பலியாகினர். இதை பார்த்ததும், லாரி டிரைவர் அங்கிருந்து தப்பினார். புகாரின்பேரில், அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கூவத்தூர் - பவுஞ்சூர் நெடுஞ்சாலை, நெல்வாய்பாளையம் கூட்ரோட்டில் திரண்டு, அவ்வழியே வந்த கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து, மறியலில் ஈடுபட்டனர். அப்போது, லாரி மோதி 2 பேர் இறந்ததை கண்டித்தும், பவுஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயங்கும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து மதுராந்தகம் ஆர்டிஓ லட்சுமிபிரியா,  செய்யூர்  தாசில்தார் சுந்தர், மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன், அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன்  ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட  பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பவுஞ்சூர் பகுதியில் செயல்படும் கல்குவாரிகளுக்கு இயக்கப்படும் லாரிகள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது ஷேர் ஆட்டோ மீது, கல்குவாரி லாரி மோதியதில் 2 பேர் இறந்துள்ளனர். அவர்களது குடும்பத்துக்கு அதிகாரிகள் என்ன செய்ய போகிறார்கள். இங்குள்ள கல் குவாரிகளை மூட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கல்குவாரிகளை சேர்ந்தவர்கள் பல்வேறு அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். எனவே, குவாரிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள், பவுஞ்சூர் பகுதியில் இயங்கும் கல்குவாரிகளை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.



Tags : road ,death ,crash , 2 killed, Kalkwari trucks, civilians, road pickup, traffic
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...