×

பேக்கிங் செய்யப்படாமல் டிரேயில் வைத்து விற்கப்படும் ஸ்வீட்களுக்கு காலாவதி தேதி: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது

புதுடெல்லி: கடைகளில் டிரேயில் வைத்து விற்கப்படும், பேக்கிங் செய்யப்படாத ஸ்வீட்களின் தயாரிப்பு, காலாவதி தேதியை கடைகளில் குறிப்பிட்டு வைத்திருப்பது ஜூன் 1ம் தேதியில் இருந்து கட்டாயம் ஆகிறது என, உணவு பாதுகாப்பு மற்றும்  தர நிர்ணய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  உணவு பாதுகாப்பு மற்றும் தர (பேக்கேஜ் மற்றும் லேபிள்) விதிகள் 2011ன்படி, பேக்கிங்கில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஆனால், பேக்கிங்  செய்யாமல் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கு இந்த விதி கடைப்பிடிக்கப்படுவது இல்லை. இந்த நிலையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
  ஸ்வீட் கடைகளில் கெட்டுப்போன ஸ்வீட்கள் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பேக்கிங் செய்யப்படாமல் டிரேயில் வைத்து கடைகளில் விற்கப்படும் ஸ்வீட்கள், எந்த தேதியில் தயாரிக்கப்பட்டவை, அவற்றை எந்த தேதி வரை  பயன்படுத்தலாம் என்று இனி கட்டாயம் குறிப்பிட வேண்டும். வரும் ஜூன் மாதம் 1ம் தேதியில் இருந்து இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என மாநில உணவு பாதுகாப்பு ஆணையர்கள்  கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.  பால் பொருட்கள் தொடர்பாக, உணவு தர நிர்ணய ஆணையம் கடந்த ஆண்டு சில வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.

இதில் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் பால் இனிப்பு வகைகளான ரசகுல்லா, பாதாம் பால், ரசமலாய், ராஜ்போக் ஆகியவற்றை தயாரிப்பு தேதியில் இருந்து 2 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. இதுகுறித்து, இனிப்பு  மற்றும் கார வகை உற்பத்தியாளர்கள்  கூட்டமைப்பின் இயக்குநர் பிரோஸ் நக்வி கூறுகையில், ‘‘பாரம்பரியமாக  தயாரிக்கப்படும் இந்திய இனிப்பு வகைகளில் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே  பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.  மற்றவை கடைகளில் டிரேயில்  வைத்துதான் விற்கப்படுகின்றன. சுமார் 200 வகையான ஸ்வீட்கள்  தயாரிக்கப்படுகின்றன. தர நிர்ணய ஆணைய உத்தரவு நடைமுறையில் சாத்தியம் இல்லாதது’’  என்றார்.

Tags : packing, Sweet, Expiration
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு