சர்ச் கட்டுவதற்கு உதவி செய்தால் கமிஷன் தருவதாக கூறி 14 லட்சம் நூதன மோசடி செய்த நைஜீரிய வாலிபர் உட்பட 3 பேர் கைது

திருமலை: ஆந்திராவின், ஓங்கோலைச் சேர்ந்தவர் அச்சய்யா.  பி.டெக் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்தாண்டு நைஜீரியாவை சேர்ந்த பீட்டர் டேனியல் பேஸ்புக்கில் நண்பரானார்.      பின்னர், இருவரும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் சாட் செய்து வந்தனர். அப்போது, பீட்டர் டேனியல், தான் `டி.பி.ஜோஸ்வா மிஷனரிஸ் என்ற பெயரில் தேவாலயம் மற்றும் மருத்துவமனை கட்ட உள்ளதாக தெரிவித்தார். மேலும்  இதற்கு பண உதவி செய்தால் 20 சதவீதம் கமிஷன் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சில நாட்கள் கழித்து பீட்டர் டேனியல் அச்சய்யாவுக்கு போன் செய்தார். அப்போது ‘இந்திய விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தன்னை சந்தேகத்தின்பேரில் பிடித்துக்கொண்டதாகவும், தன்னிடம் 2.4 மில்லியன் டாலர்  உள்ளதாகவும், ஆனால் சுங்க இலாகாவிற்கு பணம் செலுத்தவேண்டி உள்ளதால் உதவி செய்யும்படியும் கேட்டாராம். இதையடுத்து அச்சய்யா, பீட்டர் டேனியல் கூறிய வங்கி கணக்கில் ₹3 லட்சத்தை செலுத்தினார்.

தொடர்ந்து, பல்வேறு காரணங்களை கூறிய பீட்டர் டேனியலின் பேச்சை நம்பிய அச்சய்யா மேலும் ₹11.67 லட்சத்தை பீட்டர் டேனியல் வங்கிக்கணக்கில் செலுத்தினார். அதன்பிறகு பீட்டர் டேனியல், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில்  இருந்து  தொடர்பை துண்டித்தார். அதன்பின் தான் ஏமாற்றப்பட்டதை அச்சய்யா உணர்ந்து போலீசில் புகார் செய்தார். விசாரணையில் உபி.யின் பரேலியை  சேர்ந்த சாதிக்கான், முகமது யாகூப்புடன் சேர்ந்து டெல்லியில் இருந்த பீட்டர் மோசடி செய்தது  தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>