பிரபல நடிகை பலாத்கார வழக்கு நடிகை மஞ்சுவாரியர் பரபரப்பு சாட்சியம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  பிரபல நடிகை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகை  மஞ்சுவாரியர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பிரபல  மலையாள நடிகை ஒருவர் கடந்த 2 வருடத்துக்கு முன்பு, கேரளாவின் கொச்சி நகரில் இருந்து  காரில் திருச்சூர் சென்றபோது ஒரு கும்பலால் கடத்தி பலாத்காரம்  செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது முன்னாள் டிரைவர் பல்சர்  சுனில் உள்பட 9 பேர்  கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சம்பவத்துக்கு சதி திட்டம் தீட்டியது  பிரபல நடிகர் திலீப் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை  போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கொச்சி சிறப்பு  நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே வழக்கில் நடிகர் திலீப்பின்  முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சுவாரியர், நடிகைகள் ரம்யா நம்பீசன், சம்யுக்தா வர்மா, கீது மோகன்தாஸ், நடிகையும் பாடகியுமான ரிமிடோமி மற்றும்  பிரபல மலையாள நடிகர்கள்,  நடிகைகள் உள்பட 130 ேபர் சாட்சிகளாக  சேர்க்கப்பட்டனர். முக்கிய சாட்சியான நடிகை மஞ்சுவாரியர் நேற்று  நீதிமன்றத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை  11 மணிக்கு மஞ்சுவாரியர் நீதிமன்றத்தில் ஆஜரானார். மூடப்பட்ட அறையில்  நீதிபதியிடம் அவர் 3 மணி  நேரத்திற்கு மேல் சாட்சியம் அளித்தார். அப்போது பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை மீது திலீப்பிற்கு முன் விரோதம் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர் விவரித்துள்ளார். திலீப்பிற்கு எதிராக மஞ்சுவாரியர் அளித்துள்ள சாட்சியம் போலீசிற்கு பெரும் பலமாக அமையும் என்று கருதப்படுகிறது.

Related Stories: