×

காங்., ஆம் ஆத்மிதான் கலவரத்துக்கு காரணம்: வீடியோ ஆதாரம் இருப்பதாக பாஜ குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘டெல்லி கலவரத்திற்கு காங்கிரசும், ஆம் ஆத்மியுமே காரணம். அதற்கான வீடியோ ஆதாரங்களும் உள்ளன,’ என பாஜ பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது.டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் இடையே வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 34 பேர் பலியாகி உள்ளனர். போலீஸ் ஏட்டு, உளவுத்துறை அதிகாரி ஒருவரும்  கொல்லப்பட்டு உள்ளனர். இந்த கலவரத்திற்கு மூல காரணமே மத்திய பாஜ அரசும், டெல்லி ஆம் ஆத்மி அரசும்தான் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேரடியாக நேற்று குற்றம்சாட்டினார்.தேர்தல் பிரசாரத்திலேயே பாஜ அமைச்சர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஆம் ஆத்மியும் குற்றம்சாட்டுகிறது. இதற்கு பதிலடியாக, டெல்லி கலவரத்திற்கு காங்கிரசும், ஆம் ஆத்மியுமே காரணம் என்றும், அதற்கான வீடியோ  ஆதாரம் இருப்பதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:டெல்லியில் கலவரத்தை தூண்டியது யார்? இது ஏதோ 2 நாளில் நடந்த கலவரமல்ல. 2 மாதமாக சூடேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதுமே, ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் பேரணி நடத்தியது.

அப்போது ‘நாம்  முடிவு செய்யும் நேரமிது: கொல்ல வேண்டுமா குணப்படுத்த வேண்டுமா?’ என முழங்கினார்கள். இது தூண்டுவதாக அர்த்தமாகாதா?ஆம் ஆத்மி தலைவர் தாஹிர் ஹுசேன் வீடு, கலவரத்தின் ஆலை என்பதை காட்டும் வீடியோக்கள் உள்ளன. அதில், வன்முறைக்கு தயாராவதற்காக அவரது வீட்டில் துப்பாக்கி, ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்களை பார்த்தோம். ‘உங்களை  குல்லா அணிய விட மாட்டார்கள்’ என ஆம் ஆத்மி தலைவர் அமானதுல்லா பேசுகிறார். குடியுரிமை திருத்த சட்டத்தில் அப்படி எங்கு கூறப்பட்டுள்ளது? இதுபோன்ற கலவரத்தை தூண்டும் வார்த்தைகளை கண்டித்து காங்கிரசோ, ஆம் ஆத்மியோ  ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த மவுனம் ஆச்சரியமாக உள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள், ஐபி அதிகாரி இறந்ததைப் பற்றி பேசாமல், பாஜ.வை கேள்வி கேட்கிறார்கள்.இதுபோன்ற அரசியலை வன்மையாக கண்டிக்கிறோம். நாங்கள் விசாரணையை தொடங்கி உள்ளோம். கலவரத்தை அடக்கி நிலைமையை சீராக்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இரட்டிப்பு தண்டனை கெஜ்ரிவால் உறுதி
ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் காந்தி கூறுகையில், ‘‘உளவுத்துறை அதிகாரியை கொன்றதாக குற்றம்சாட்டப்படும் ஆம் ஆத்மி தலைவர் தாஹிர் ஹுசேன், வன்முறை சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இல்லை என்றும், அவரது வீட்டில் மர்ம  கும்பல் நுழைந்ததாகவும் அறிக்கை கொடுத்துள்ளார். தனக்கு பாதுகாப்பு தரும்படி கேட்ட பிறகு 8 மணி நேரம் கழித்தே போலீஸ் வந்து தனது குடும்பத்தினரை மீட்டதாகவும் கூறியுள்ளார்,’’ என்றார். இது குறித்து டெல்லி முதல்வரும், ஆம்  ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘வன்முறையில் ஈடுபட்ட எவரும் கட்சி பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள். அதுவே ஆம் ஆத்மி கட்சியினராக இருந்தால் இரட்டிப்பு தண்டனை வழங்கப்படும்,’’ என்றார்.

கலவரத்தில் பிறந்த மிராக்கிள் பேபி
கடந்த திங்கட்கிழமை இரவு, டெல்லியின் காரவால் பகுதியில் வசித்த நிறைமாத கர்ப்பிணி ஷபீனா பர்வீன் (30), அவரது கணவர், மாமியார் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கலவர கும்பல் அவர்களின் வீட்டில் புகுந்து சரமாரியாக  தாக்குதல் நடத்தி உள்ளது. குண்டுகளையும் வீசியுள்ளது. கர்ப்பிணி என்றும் பாராமல் ஷபீனாவை வயிற்றியிலேயே உதைத்துள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து தப்பிய நிலையில், ஷபீனாவுக்கு பயத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதில்  ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ‘மிராக்கிள் பேபி’ என்று பெயரிட்டுள்ளனர். ஷபீனாவின் மாமியார் கூறுகையில், ‘‘அன்று இரவு நாங்கள் உயிர் பிழைப்போமா என்ற சந்தேகம் இருந்தது. இறைவன் அருளால் உயிர்தப்பினோம்’’ என்றார்.



Tags : AAP ,Baja , Cong., Yes AAP,riot, Baja ,video evidence
× RELATED முன்மொழிந்தவர்கள் திடீர் பல்டியால்...