திருவாரூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வரை வலியுறுத்தி கோஷம்

மன்னார்குடி: திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முதல்வர் முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சோழங்கநல்லூர் கிராமத்தில் கடந்த வருடம் ஜூலை 7ம் தேதி ஓஎன்ஜிசி சார்பில் புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகள் துவங்கின. தங்கள் பகுதிக்குள் புதிய கிணறு அமைக்க கூடாது என  அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் நிலம் பாதிக்கப்படுவதாக கூறி பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதற்கு தீர்வு காணும் வகையில், நேற்றுமுன்தினம் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் ஆர்டிஓ  புண்ணியக்கோட்டி தலைமையில் நடைபெற்றது. அங்கு வந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், அரசு கொண்டு வந்துள்ள காவிரி டெல்டா வேளாண் பாதுகாப்பு சட்டம் அமலான பிறகு இக்ககூட்டம் நடை பெறுவதை அனுமதிக்க முடியாது. கூட்டத்தை  ஆர்டிஓ உடனே கைவிட வேண்டும்மென வாக்குவாதம் செய்தார். இதன்பின், கூட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சோழங்கநல்லூர் கிராமத்தில் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடத்திற்கு நேற்று காலை வந்த போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்பாலன் தலைமையிலான விவசாயிகள், ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் பணிகளை  உடனே நிறுத்தி சோழங்கநல்லூர் கிராமத்தை விட்டு ஓஎன்ஜிசி நிர்வாகம் வெளியேற வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த கற்பகம் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் கிராமத்தில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும்  பணிகளை முதல்வர் முழுமையாக தடுத்து நிறுத்தினால் எங்கள் கிராம பெண்கள் சார்பில் நாங்களே முதல்வருக்கு பாராட்டு கூட்டம் நடத்த தயாராக உள்ளோம். எங்கள் உணர்வுகளை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories:

>