×

பட்ஜெட்டில் அறிவித்த பணிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் 450 உதவி செயற்பொறியாளர் பணியிடம் காலி: முதல்வர் உடனான ஆலோசனை கூட்டத்தில் பதில் அளிக்க முடியாமல் திணற போகும் உயரதிகாரிகள்

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், உதவி  செயற்பொறியாளர் 750 பணியிடங்கள் உள்ளன. இவர்களின் கண்காணிப்பின் கீழ் தான் கட்டுமானம் பிரிவின் கீழ் பல்வேறு அரசு துறைகளுக்கு கட்டிடங்கள் கட்டுதல், கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள், ஏரி, குளங்கள், அணைகள் புனரமைப்பு  உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக நிரப்படாமல் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியான  உதவி பொறியாளர் பட்டியல் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதில் குளறுபடி இருப்பதாக கூறி ஒரு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு  தற்போது வரை நிலுவையில் உள்ளது.

இதை காரணம் காட்டி சட்டத்துறை, பொதுத்துறை அதிகாரிகள் உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு பட்டியலுக்கு ஒப்புதல் வழங்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இதனால், தற்போது வரை 478 உதவி செயற்பொறியாளர்  பணியிடங்கள் வரை காலியாக உள்ளது. இதன்காரணமாக ஒரு உதவி செயற்பொறியாளர் 4 முதல் 5 பணியிடங்களை கூடுதலாக கவனித்து வருகின்றனர். இதன் காரணமாக, கடந்த பட்ஜெட்டில் அறிவித்த பணிகளை கண்காணிக்கவும், அந்த  பணிகளுக்கான திட்ட அறிக்கை தயார் செய்யவும் உதவி செயற்பொறியாளர்கள் இல்லாத நிலையில் பெரும்பாலான திட்டப்பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. குறிப்பாக, குடிமராமத்து, நீர்வளநிலவள திட்டத்தின் ஏரிகள் புனரமைப்பு  பணிக்கு திட்ட அறிக்கை தயார் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இந்த திட்டப் பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே போன்று கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட தடுப்பணை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் திட்ட அறிக்கை தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இப்பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் இன்று காலை 10 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த நிலையில் கடந்த பட்ஜெட்டில் அறிவித்த பெரும்பாலான பணிகள் உதவி செயற்பொறியாளர்கள் காலி பணியிடங்களால் செயல்பாட்டு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் என்ன பதில் அளிப்பது என்பது தெரியாமல்  பொறியாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.


Tags : implementation , Problems,implementing, 450 Assistant , Vacancy
× RELATED பணியிடங்களில் பெண்களை பாதுகாக்கும்...