×

‘தலைவி’ படத்தை எதிர்த்து வழக்கு தொடர தீபாவுக்கு எந்த தகுதியுமில்லை: இயக்குனர் கவுதம் மேனன் ஐகோர்ட்டில் பதில்

சென்னை: தலைவி படத்தை எதிர்த்து தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் மனுதாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் “குயின்” என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம்  வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர். அதற்கு தடை கேட்டு தீபா வழக்கு தொடர்ந்திருந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதால் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்  மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.

 வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.  அதில்,  தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை. ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர் என கூறும் தீபா பலமுறை ஜெயலலிதாவை தான் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த கதை உண்மை  சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. தி குயின் என்ற பெயரில்  அனிதா சிவகுமார்  என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த  தொடர் எடுக்கப்பட்டுள்ளது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இயக்குனர் விஜய்  உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தந்து விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Deepa ,Gautham Menon ,hero , headline image, , qualifications, Director ,Gautam Menon,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...