×

‘டாக்டர்கள் இரண்டாவது கடவுள்’ அங்கீகாரமற்ற மருத்துவ படிப்புகளை நடத்துவோர் மீது சட்ட நடவடிக்கை : அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அங்கீகாரமற்ற மருத்துவ படிப்புகளை நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. எலக்ட்ரோ ஹோமியோபதி பட்டய படிப்பு முடித்து, கிளினிக் நடத்தி வரும் பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் உரிய அனுமதியின்றி கிளினிக் நடத்துவதாக மருத்துவத்துறையினர் தொந்தரவு செய்கின்றனர். பட்டயபடிப்பு முடித்தவர்கள் மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி கோரி, தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில் பதிவாளரிடம் முறையிட்டோம். அவர், எங்களது கோரிக்கையை நிராகரித்தார். மேலும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வி மற்றும் பதிவு சான்றிதழ் இல்லாமல் யாரும் சிகிச்சையளிக்க கூடாது என கடந்தாண்டு மார்ச் 5ல் உத்தரவிடப்பட்டது. எலக்ட்ரோ ஹோமியோபதி முறைக்கு அங்கீகாரம் வழங்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே தமிழ்நாடு ஹோமியோபதி கவுன்சில் பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மருத்துவத்துறை அதிகாரிகள் தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா விசாரித்தார். ஹோமியோபதி கவுன்சில் வக்கீல்கள் விஜயசங்கர், கார்த்திகேயன் ஆஜராகி, ‘‘இந்த டிப்ளமோ படிப்பிற்கு ேஹாமியோபதி கவுன்சில் அனுமதி இல்லை. இவர்களை டாக்டர்களாக அங்கீகரிக்க முடியாது. இதை அனுமதித்தால் சிகிச்சை பெற வருபவர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது’’ என வாதிட்டனர். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அங்கீகரிக்கப்படாத ஒரு படிப்பை முடித்தவர்கள் மிகவும் காலதாமதமாக நீதிமன்றத்தின் பொன்னான ேநரத்தை வீணடிப்பதற்கு, ஆகச்சிறந்த முன்னுதாரணமாக இந்த வழக்கு உள்ளது. முறையான மருத்துவம் கிடைக்க வேண்டுமென்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. அங்கீகாரம் இல்லாத பட்டம் அல்லது பட்டயப்படிப்பு முடித்தவர்கள் சிகிச்சை அளித்தால், அதனால் ஏற்படும் ஆபத்தை யாரும் எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் டாக்டர் என்பவர் இரண்டாவது கடவுள். ஆனால், அங்கீகாரமற்ற படிப்பிற்கு சான்றிதழ்கள் வழங்குவதால், திறமையான டாக்டர்களும் ஆபத்தை சந்திக்க வேண்டியுள்ளது. மனுதாரர்களின் எலக்ட்ரோ ஹோமியோபதி சான்றிதழ்களை பார்க்கும்போது, பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாத டிப்ளமோ என்பது தெரிகிறது. பதிவு செய்யப்படாத சான்றிதழ் மூலம் மாற்று முறை மருத்துவம் பார்க்க முடியாது. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

அங்கீகாரமற்ற பல படிப்புகள் தொடர்பான விதிகள் உள்ளன. இதை முறையாக அமல்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கீகாரமற்ற மருத்துவ படிப்புகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் மாநில அரசுகளுக்கு ஏற்கனவே சில உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரர்கள் அங்கீகாரமற்ற 3 ஆண்டு படிப்பை படித்துள்ளனர். இதை நடத்தியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அங்கீகாரமற்ற மருத்துவ படிப்புகளை நடத்தும் போலி நிறுவனங்கள் மீது மாநில அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 


Tags : Doctors ,god ,ICT branch , Legal action, doctors conducting ,unauthorized medical studies
× RELATED தண்ணீர்… தண்ணீர்…