×

7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 6 டிஎம்சி நீர் வரத்து : பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 6 டிஎம்சி நீர் வந்து சேர்ந்துள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறக்க கோரி தமிழக அரசு சார்பில் ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று கடந்த செப்டம்பர் 25ம் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. இந்நிலையில், முதல் தவணை காலத்தில் 8 டிஎம்சியில் 4 டிஎம்சி வரை தமிழகத்துக்கு ஆந்திரா தந்தது. தொடர்ந்து, தமிழகத்துக்கு தண்ணீர் கூடுதலாக தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே, இரண்டாவது தவணை காலம் ஏப்ரல் 30ம் தேதி வரை உள்ளது. ஆனால், கண்டலேறு அணையில் இருந்து திருப்பதி, நகரி உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் தர வேண்டியுள்ளது. எனவே, வரும் பிப்.29ம் தேதி (நாளை)  தண்ணீர் திறப்பை நிறுத்த ஆந்திரா முடிவு செய்துள்ளது.ஆனால், தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கூடுதலாக 3 டிஎம்சி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 6.007 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு வந்துள்ளது. இது, கடந்த 7 ஆண்டுகளை காட்டிலும் அதிகப்படியாக தமிழகத்துக்கு ஆந்திரா தந்துள்ளது. நேற்று தமிழக எல்லைக்கு வரும் நீரின் அளவு 266 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து குறைந்து கொண்டிருப்பதால் சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் அசோகன், நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் பேரில் கண்காணிப்பு பொறியாளர்கள் முத்தையா, ஜார்ஜ் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் ஆந்திரா நீர்வளப்பிரிவு அதிகாரிகளை நேரில் சந்தித்து மீண்டும் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : TMC ,Kandaleratu Dam ,Tamil Nadu ,Public Works Department 6 TMC , 6 TMC of water ,Kandaleratu Dam ,Tamil Nadu after 7 years, Public Works Information
× RELATED வெப்ப அலை வீசுவதால் ஏரிகளில் வேகமாக...