×

நிலத்தடி நீர் எடுக்க தடை விதித்ததை கண்டித்து குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

* சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம்

சென்னை: நிலத்தடி நீர் எடுக்க தடை விதித்ததை கண்டித்து குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் தட்டுபாடு அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சியதால், நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழ் சென்றது. இதனால், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள 471 அபாயகரமான பிர்காவில் நிலத்தடி நீர் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அதே நேரத்தில் குடிநீர் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீர் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் பெற்று எடுத்து கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், தமிழக அரசு சார்பில் குடிநீர் கேன் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி தர மறுத்து விட்டது. இதை தொடர்ந்து குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது, தமிழக அரசு சார்பில் குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கை ஏற்பதாக கூறியிருந்தது.

இந்த நிலையில், நேற்று உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் தமிழக அரசு சார்பில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள இடங்களில் நிலத்தடி நீர் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ளதாக கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் நேற்று மாலை 6 மணி முதல் உற்பத்தியை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, தினமும் சென்னையில் 5 லட்சம் குடிநீர் கேன் உட்பட மாநிலம் முழுவதும் 20 லட்சம் குடிநீர் கேன்கள் விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முரளி கூறியதாவது: சென்னையில் 500 குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 1627 குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்கள் சார்பில் சென்னையில் 5 லட்சம் குடிநீர் கேன் உட்பட மாநிலம் முழுவதும் 20 லட்சம் குடிநீர் கேன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் நிலத்தடி நீர் எடுக்க கடந்த 2014ல் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதன்பேரில் குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் நிலத்தடி நீர் எடுக்கப்பட்ட தடைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன்பிறகு குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் தமிழக அரசின் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டு தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை 6 மணி முதல் (நேற்று) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். எங்களது கோரிக்கையை அரசு ஏற்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் 19 குடிநீர் நிறுவனங்களுக்கு சீல்

கடலூர் மாவட்டத்தில் கடலூர் கோட்டத்தில் 19 நிறுவனங்கள் பொதுப்பணித்துறை, உணவு கட்டுப்பாட்டுத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்றவற்றில் உரிய அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருவது அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்தந்த வட்டங்களில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள், சிங்கிரிகுடி, திருவந்திபுரம், எம்.புதூர், அரிசிபெரியாங்குப்பம், ராமாபுரம், வழிசோதனைபாளையம், கண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் 14 நிறுவனங்களுக்கும், பண்ருட்டி வட்டத்தில் 4, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 1 என மொத்தம் 19 நிறுவனங்களுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

Tags : Drinking water cane manufacturers ,strike , Drinking water, cane manufacturers protest ,strike , ground water ban
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...