×

மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6வது கப்பல் கடலோர காவல் படை ரோந்து கப்பல் வெள்ளோட்டம் : மத்திய அமைச்சர் மனைவி தொடங்கி வைத்தார்

சென்னை: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் மேக் இன் இந்தியா திட்டத்தில், உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 6வது கடலோர ரோந்து வஜ்ரா கப்பல் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதனை மத்திய அமைச்சரின் மனைவி தொடங்கி வைத்தார். மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 1,432 கோடி மதிப்பீட்டில் 7 ரோந்து கப்பலை வடிவமைக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்திய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட 5 ரோந்துக் கப்பல்கள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், 6வது அதிநவீன ரோந்து வஜ்ரா கப்பல் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்தது. இதில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கடலோர பாதுகாப்பு படையின் இயக்குனர் ஜெனரல் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், அமைச்சரின் மனைவி கீதா மாண்டவியா, கப்பலின் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.

இது, 26 நாட்டி கல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரோந்து கப்பல் 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் 2,100 டன் எடையும் கொண்டது. இந்த கப்பல், 5000 மைல்கள் வரை கரைக்கு திரும்பாமல் கடலில் பயணிக்கும் திறன் உடையது. இந்த கப்பலின் மூலம் எல்லை தாண்டி ஊடுருவல், கடல் கொள்ளையர்கள், கடத்தல் போன்ற குற்ற செயல்களை எளிதாக கண்டறிந்து தடுக்கக்கூடிய வகையில் பல்வேறு கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும், அதிநவீன துப்பாக்கிகள், ஹெலிகாப்டர் இறங்கு தளத்துடன் ரோந்து கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு பின், செய்தியாளர்களுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், ‘61 கப்பல்கள் மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆறுகளை இணைத்து நீர்வழி போக்குவரத்தை தொடங்குவது குறித்து 36 இடங்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார். நிகழ்ச்சியில், கடலோர காவல்படை அதிகாரிகள், எல் அண்டு டி நிறுவன துறை அதிகாரிகள், பொன்னேரி ஆர்டிஓ பெருமாள் (பொறுப்பு), காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன். காட்டூர் வருவாய் ஆய்வாளர்  உஸ்மான் ஷெரீப். கிராம நிர்வாக அலுவலர்கள் சந்தோஷ்குமார், ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Coast Guard ,Union Minister ,Patrol Vessel 6th Ship Domestically Made in Make in India Project ,Wife Launches Coast Guard ,India ,Mack , Coast Guard Patrol Vessel, 6th Domestically,Mack in India Project, Union Minister's Wife Launches
× RELATED தூத்துக்குடி அருகே நடுக்கடலில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி