×

சென்னை விமானநிலையத்தில் கடும் வாக்குவாதம் மெக்கா உம்ரா பயணத்துக்கு திடீர் அனுமதி மறுப்பு : சவூதி அரசு தடை விதிப்பால் 170 பயணிகள் ஏமாற்றம்

சென்னை: சென்னை விமானநிலையத்தில் இருந்து மெக்காவுக்கு நேற்று உம்ரா பயணம் செல்ல வந்த 170 பயணிகளுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சவூதி அரேபிய அரசு தடை உத்தரவை காட்டியபின் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சென்னை சர்வதேச விமானநிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு  செல்லும் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று பகல் 12.15 மணிக்கு புறப்படத்தயாரானது. அதில் 258 பயணிகள் செல்ல இருந்தனர். அதில் 170 பேர் முஸ்லிம்கள். இவர்கள் மெக்காவுக்கு புனிதபயணமான உம்ரா செல்ல வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, வேலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களில் பெண்களும் இருந்தனர். அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். அப்போது திடீரென விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து உம்ரா பயணத்துக்கு யாரும் விமானத்தில் ஏற வேண்டாம் என்று தடுத்தி நிறுத்தினர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து  ஏன் எதற்காக எங்களை தடுக்கிறீர்கள் என்று கேட்டனர்.

அப்போது சவூதி அரேபிய அரசு கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக வெளிநாட்டு யாத்திரிகர்கள் யாரும் எங்கள் நாட்டுக்கு வரவேண்டாம். அவர்கள் வந்தால் கொரானோ வைரஸ் பாதிப்பு எங்கள் நாட்டிலும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை  யாரும் வரவேண்டாம் என்று தடை உத்தரவு போட்டுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர். அதற்கு அவர்கள்   எங்களுக்கு விசா கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் பல நாட்களாக விசேஷ தொழுகை நடத்தி இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். கடைசி நேரத்தில்  புனித பயணத்துக்கு தடை விதிக்காதீர்கள் என்று ஆவேசமாக பேசினர். ஏர்லைன்ஸ் நிர்வாகமும் உம்ரா பயணிகளை நாங்கள் ஏற்றமாட்டோம் என்று மறுத்துவிட்டனர.

இதனால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  விமான நிலைய உயர் அதிகாரிகள் வந்து அவர்களை சமரசம் செய்தனர். சவூதி அரேபிய அரசிடம் இருந்து நேற்று காலை  10மணிக்கு மேல் தான்  திடீர்தடை உத்தரவு வந்துள்ளது. இங்கு மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள எல்லா விமான நிலையத்திலும் அமல்படுத்துகிறோம் என்று கூறி தடை உத்தரவு நகலை காண்பித்தனர். அதன் பிறகு  170 பேரும் விமான நிலையத்தில் சிறப்பு தொழுகை நடத்திவிட்டு ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். உம்ரா பயணிகள் 170 பேர் மெக்கா செல்ல முடியாமல் திரும்பியது இதுவே முதல்முறையாகும். மற்ற 88 பயணிகளுடன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

மதுரையிலும் 67 பேருக்கு தடை

கொழும்பு வழியாக மெக்காவுக்கு உம்ரா பயணம் செல்வதற்காக, மதுரை விமானநிலையத்திற்கு நேற்று 37 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் உள்ளிட்ட 67 பயணிகள் வந்தனர். பயணம் செய்ய தயாராக இருந்த நிலையில் சவுதி அரேபியா நாட்டு அரசு, கொரோனா வைரஸ் தாக்கம்  காரணமாக தங்கள் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நுழைய  தடை விதித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து 67 உம்ரா பயணிகளும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Tags : Saudi ,passengers ,Chennai ,government ,traveler ,airport , Sudden dispute,Chennai airport , 170 travelers disappointed , Saudi government ban
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...