×

திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி மரணம் : மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி நேற்று காலை உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில்  வசித்து வந்தவர் கே.பி.பி.சாமி. சில மாதங்களாக  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது உடல்நிலை மோசமாகி வீட்டிலேயே உயிர் பிரிந்தது. திமுகவின் மூத்த உறுப்பினரும் முன்னாள்  கவுன்சிலருமான பரசுராமன் மகன் கே.பி.பி.சாமி, திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர். 2006ம் ஆண்டு  சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டு மீன்வளத்துறை அமைச்சரானார். தொடர்ந்து, 2016ம் ஆண்டு பேரவை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக மாநில மீனவர் அணி செயலாளராக இருந்தார்.  இவருக்கு உமா என்ற மனைவியும் இனியவன், பரசு பிரபாகரன் என்ற இரு மகன்கள், உதயா என்ற ஒரு மகளும் உள்ளனர். முன்னாள் கவுன்சிலரான அவரது மனைவி உமா, மூத்த மகன் இனியவன் ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர்.  இவருக்கு கே.பி.சங்கர், கே.பி.இளங்கோ, கே.பி.சொக்கலிங்கம்  என மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இதில் முன்னாள் கவுன்சிலரான கே.பி.சங்கர் திருவொற்றியூர் திமுக மேற்கு பகுதி செயலாளராகவும், முன்னாள் கவுன்சிலரான கே.பி.சொக்கலிங்கம் வட்ட செயலாளராகவும் உள்ளனர்.

மறைந்த கே.பி.பி.சாமியின் உடல் அஞ்சலிக்காக திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  அவரது உடலுக்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம் பி.கே.சேகர்பாபு, ஆவடி நாசர், எம்.பி.க்கள் கலாநிதி  வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.டி.சேகர், வி.பி. துரைசாமி, ப.ரங்கநாதன் எம்எல்ஏ, எ.வ.வேலு, பூச்சிமுருகன், தி.மு.தனியரசு, புழல் நாராயணன், மருதுகணேஷ், திருசங்கு, முருகேசன், முத்தையா, ஆசைத்தம்பி, குறிஞ்சி கணேசன், தினேஷ்குமார், ஏ.வி.ஆறுமுகம், முன்னாள் மண்டல குழு தலைவர் தனரமேஷ் உட்பட ஏராளமான மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கே.பி.பி.சாமி உடல் இன்று மாலை 3 மணிக்கு திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் தெரு அருகே உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

Tags : MLA ,death ,Thiruvottiyur DMK ,MK Stalin ,KPPSamy ,KPP Sami , Thiruvottiyur DMK MLA KPP Sami death, MK Stalin pays tribute
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...