×

கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மக்கள் ஒரு குடம் லாரி தண்ணீர் ரூ.12க்கு வாங்கும் அவலம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஆறுமுக யாதவர் நகர், அப்துல்கலாம் தெரு, லெட்சுமி நகர், ஆகிய பகுதிகள் உள்ளது. இங்கு 100க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் ஊராட்சி மூலம் பொது குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் வந்து 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.  தாமிரபரணி குடிநீரும் வருவதில்லை. இதனால் தனியார் லாரிகளில் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு வாங்கும் நிலையில் உள்ளனர். மேலும் இந்த பகுதியில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டிக்கு குடங்களை வைத்து தள்ளு வண்டிகளில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் தண்ணீருக்கு இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே முறையாக குடிநீர் வழங்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ஆறுமுக யாதவா நகரில் அமைக்கப்பட்ட மினிபவர் பம்பில் உள்ள பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை எடுத்து சென்றுவிட்டனர். ஆனால் புழக்கத்திற்கு கூட தண்ணீர் பிடிப்பதற்கு ஊராட்சி மூலம் ஒரு மினிபவர் பம்ப் மற்றும் அடிகுழாய் அமைக்கப்படவில்லை. இந்த பகுதியில் உள்ள ரோடு குண்டும், குழியுமாகி மண் ரோடாக உள்ளது. மழை காலத்தில் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி சகதிக்காடாக மாறிவிடுவதால் தெருக்களில் பொதுமக்கள் நடக்கமுடியாத நிலையில் உள்ளது. இதனால் தனியார் குடிநீர் வாகனங்களும் இந்த பகுதிக்குள் ரோட்டை காரணம் காட்டி வருவதில்லை. மேலும் தெருக்களில் வாறுகால் முறையாக அமைக்கப்படாமல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. ஊராட்சி மூலம் துப்புரவு பணி செய்வதில்லை. இந்த பகுதி மக்களே தேங்கியிருக்கும் கழிவுநீரை சுத்தம் செய்து வருகின்றனர்.

கஞ்சநாயக்கன்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பிரதான ஓடை தூர்வாரப்படாமல் முட்புதர்கள் வளர்ந்துள்ளது. ஓடை சீராக இல்லாததால் கழிவுநீர் தேங்கி கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக உள்ளது. இதேபோல் அப்துல்கலாம் தெருவில் ரோடு வசதி, தெருவிளக்குகளும் முறையாக அமைக்கப்படவில்லை. லெட்சுமி நகரில் மெயின் தெருவில் 25 அடி அகலமுள்ள ரோட்டில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி 14 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் நடந்தது.  ஆனால் 13 அடி அகலத்திற்கு தான் பதித்துள்ளனர். ரோடு போட்டும் பயன் இல்லை.  பேவர்பிளாக் கற்கள் முறையாக பதிக்கப்படாததால் வாகனங்களில் செல்லும்பொழுது தடுமாறி கீழே விழுகின்றனர். 13 அடி போக மீதம் இருபக்கம் உள்ள 12 அடி அகலத்தை தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்யும் நிலையில் உள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடந்தபோது ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை.

இந்த பகுதிகளுக்கு பெண்களுக்கென பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த நல்லபாண்டி கூறியதாவது, ‘‘கடந்த 4 மாத காலமாக குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக இந்த பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் அலைந்து திரிகின்றனர். முறையான குடிநீர் வசதி வழங்க வேண்டும்.  சாலை வசதி முறையாக அமைக்கப்பட வேண்டும்’’ என்றார். இதுகுறித்து ராதிகா கூறியதாவது, ‘குடிநீர் பிரச்சனை தான் முக்கிய பிரச்சனையாக உள்ளது. குழாய்கள் அமைக்கப்பட்டும் தண்ணீர் வருவதில்லை. வாறுகால் துப்புரவு செய்ய பணியாளர்கள் வருவதில்லை. பொது கழிப்பிட வசதி இலலை. மழை காலங்களில் எங்கள் பகுதி சாலை வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி தீவு போல் ஆகிவிடுகிறது. முறையான சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்’ என்றார்.

Tags : pitcher ,Kanjayanakanpatti , Ganjayankanpatti panchayat, lorry water
× RELATED அருப்புக்கோட்டை அருகே...