×

திருமயம், அரிமளம் பகுதியில் கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்: பாத்திகளில் தண்ணீர் பாச்சி தட்டுகளில் இறைக்கும் பெண்கள்

திருமயம்: திருமயம், அரிமளம் பகுதி விவசாயிகள் கோடை விவசாயத்தில் மும்முரம்,தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையால் விவசாய நிலப்பரப்பு குறைந்து கொண்டே வந்தாலும், இன்றளவும் விவசாயத்தை கைவிடாமல் சில விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் திருமயம், அரிமளம் பகுதியில் பருவ காலங்களில் நெல் விவசாயமும், கோடை காலத்தில் ஒருசில விசாயிகள் கோடை நெல், சிலர் எள், உளுந்து, கடலை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் பருவ விவசாயத்திற்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், கோடை விவசாயம் என்பது கேள்வி குறியாகி போனது.

மேலும் பல ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் விளைநிலங்கள் தரிசாக உள்ளதால் வயல்களில் புதர் செடிகள், கருவேல மரங்கள் மண்டி தண்ணீர் இருந்தாலும், விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. இதனிடையே கடந்த வருடம் திருமயம், அரிமளம் பகுதியில் பெய்த மழை ஓரளவுக்கு பருவ விவசாயத்திற்கு கை கொடுத்த நிலையில், கோடை விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் நீர் நிலைகளில் இல்லாததால் ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் கோடை விவசாயத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதே சமயம் ஆழ்துளை கிணறுகளும் கோடை காலத்தில் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் தருவதில்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் கோடை விவசாயத்தின் மூலம் பயிரிடப்படும் பயிர்களை காப்பாற்ற இரவு, பகலாக கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கோடை காலங்களில் நிலங்கள் அதிகளவு தண்ணீர் உறிஞ்சுவதால் வயல் முழுவதும் தண்ணீர் பாய்ச்சுவதற்கு வயல் முழுவதும் பாத்தி போன்று குழி அமைத்து அதன் வழியே தண்ணீர் பாச்சி, தட்டு மூலம் கடலை சாகுபடிக்கு இறவை செய்து பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். ஆனால் காலம் கடந்த விவசாயம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் போதுமான மகசூல் இல்லாததால் உழைப்புக்கு ஏற்ற வருவாயின்றி விவசாயிகள் தவிப்பதாக திருமயம், அரிமளம் பகுதி விவசாயிகள் குமுறுகின்றனர்.

Tags : Thirumayam ,Arimalam ,area Farmers , Thirumayam, Arimalam, Sea Cultivation
× RELATED புதுக்கோட்டையில் மழை காரணமாக ஒன்றிய...