×

போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா?.. ஐகோர்ட் கேள்வி

சென்னை: போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்திற்கு எதிரான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சேலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்திற்கு எதிரான மனு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை பொறுத்தவரையில் சிறு குழந்தைகள் உட்பட 18 வயது பூர்த்தியாகாத குழந்தைகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிப்ரவரி 14ம் தேதி தொடங்கிய போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் நடைபெற்று வருகிறது. இரவு நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் இப்போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

எனவே காவல்துறையின் அனுமதியின்றி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கும், சேலம் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் மனுதாரர் தரப்பில் இப்போராட்டத்தில் 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டுள்ளனர். எனவே இப்போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு மனுதாரரிடம், போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு ஏதேனும் விதிகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அப்படி ஏதேனும் சட்ட விதிகள் இருப்பின் அதனை மார்ச் 2ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : persons ,protests , Struggle, 18 years old, not to participate, rules, Icort question
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது