×

குமரியில் வெயில் கொடுமையை சமாளிக்க டிராபிக் போலீசாருக்கு மோர், குளிர்பானம்: எஸ்.பி. தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயில் வறுத்தெடுத்து வருகிறது. காலை 10 மணியில் இருந்தே சூரியன் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. பகலில் வெளியில் தலை காட்ட முடியவில்லை. வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள், முதியோர், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெயில் கொடுமையால் தோல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்ப மக்கள் குளிர்பான கடைகளில் குவிந்து வருகிறார்கள். பழச்சாறு, கரும்புசாறு, தர்பூசணி மற்றும் பழ வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இதே போல் பகல் வேளையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசார் வெயிலில் வாடி வதங்கி வருகின்றனர். கடும் வெயிலில் சாலையில் நின்று அவர்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த பெரும் சிரமப்படும் நிலை உள்ளது. நாகர்கோவில் மாநகரை பொறுத்தவரை பல முக்கிய சந்திப்புகளில் காலை முதல் இரவு வரை போலீசார் நிற்க வேண்டிய நிலை உள்ளது. வெயிலில் பணிபுரியும் டிராபிக் போலீசாரின் இந்த நிலையை கருதி, அவர்களுக்கு பகலில் 2 வேளை மோர், குளிர்பானம் வழங்க எஸ்.பி. நாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்த திட்டம் நேற்று தொடங்கியது. கலெக்டர் அலுவலக சந்திப்பில் டிராபிக் ஒழுங்குப்படுத்தும் பணியில் இருந்த போலீசாருக்கு மோர் வழங்கி, இந்த திட்டத்தை எஸ்.பி. ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏ.எஸ்.பி. ஜவகர், டிராபிக் இன்ஸ்பெக்டர் அருண், சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், சுரேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். நாகர்கோவில் மாநகரை பொறுத்தவரை சுமார் 30 முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர். இவர்களுக்கு நாள்தோறும் 2 முறை மோர் அல்லது குளிர்பானம் வழங்கப்படும். இதே போல் கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை ஆகிய சப்-டிவிஷன்களில் உள்ள போக்குவரத்து போலீசாருக்கும் மோர் அல்லது குளிர்பானம் வழங்கப்பட உள்ளது.

Tags : Tropic ,Kumari , Wheat, Tropic cops deal, sunburns,Kumari Beginning
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...