×

3 மொழி பேசும் மக்கள், இயற்கை சூழல் நிறைந்த தொழில் நகரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஓசூர் மேலும் வளம் பெற வாய்ப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர், தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஒரு முக்கிய நகரம். மாவட்ட தலைநகரமான கிருஷ்ணகிரியில் இருந்து 51 கிலோ மீட்டர் தொலைவிலும், கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் ஓசூர் அமைந்துள்ளது. தொழிற்சாலைகள் மிகுந்த இந்த நகரம் தொழில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. குளிர்ந்த தட்பவெப்ப நிலை பெரும்பாலான நாட்கள் உள்ள பகுதியாக ஓசூர் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 879 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓசூர்,  பழங்காலத்தில் செவிடப்பாடி என்று அழைக்கப்பட்டது  11ம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது.13ம் நூற்றாண்டில் ஒய்சாள மன்னன் வீர நாமநாதன் ஆட்சி கால கல்வெட்டில் சூடவாடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் கி.பி.1674ல் மைசூர் மன்னர்கள் காலத்தில் ஹொசாவூரு என்று அழைக்கப்பட்டது. இந்த  ஹொசவூரு என்பது பின்னாளில் மருவி ஓசூர் என்று அழைக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சேலம் கலெக்டராக இருந்த வால்டன் லலியட் ஓசூரை சேலம் மாவட்ட தலைமையிடமாக அறிவித்தார். 1902ல் ஓசூர் ஊராட்சியானது. அதன் பிறகு 1969ல் ஓசூர் தேர்வு நிலை பேரூராட்சி ஆனது. 1992ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியானது.1998ல் தேர்வு நிலை நகராட்சி ஆனது. 2011ம் ஆண்டு மத்திகிரி பேரூராட்சி,ஜூஜூவாடி,மூக்கண்டபள்ளி,ஆவலப்பள்ளி,சென்னத்தூர் ஆகிய ஊராட்சிகள் ஓசூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.அதன் பிறகு 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓசூரை மாநகராட்சியாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.தொடர்ந்து 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அச்செட்டிபள்ளி, பேகேபள்ளி,சென்னசந்திரம்,கொத்தகொண்டபள்ளி,   ஒன்னல்வாடி,நல்லூர்,தொரபள்ளி அக்ரஹரம்,பேரண்டப்பள்ளி உள்ளிட்ட எட்டு ஊராட்சிகள் ஓசூருடன் இணைக்கப்பட்டு,தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஓசூர் சிறப்பு நிலை நகராட்சியாக இருந்தபோது வார்டுகளின் எண்ணிக்கை 45 ஆக இருந்தது. தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஓசூர் மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. வரும் தேர்தலில் பழைய வார்டுகள் 45 மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஓசூர் மாநகராட்சியை பொறுத்தவரையில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் இருப்பார்கள் என கூறப்படுகிறது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்,தெலுங்கு, கன்னட மொழி பேசுபவர்களாக உள்ளனர். ஓசூரில் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் பிரசித்தி பெற்றதாகும். இதைத் தவிர கோட்டை மாரியம்மன் கோவில், ராமர் கோவில்,பெரியார் நகர் வேல்முருகன் கோவில்,உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவைகளாக உள்ளன. மேலும் சி.எஸ்.ஐ.,ஆர்.சி. தேவாலயங்களும்,நேதாஜி நகர், தர்கா பகுதி மசூதிகள் வழிபாட்டு தலங்களாக உள்ளன. ஓசூரில் டி.வி.எஸ்.,அசோக்லேலண்ட்,டைட்டான் உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் உள்ளன. மேலும் சிப்காட் 1,சிப்காட் 2ல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. குண்டூசி தயாரிக்கக் கூடிய நிறுவனங்கள் முதல் விமான பாகங்கள் தயாரிக்கக் கூடிய நிறுவனம் வரையில் ஓசூரில் உள்ளது சிறப்பு அம்சமாகும்.

ஓசூரில் தனியாருக்கு சொந்தமான விமானம் தயாரிக்கும் நிறுவனத்தில் விமான ஓடுதளம் அமைந்துள்ளது. பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் ஓசூர் வழியாக நாள்தோறும் செல்கின்றன.அதே போல வட மாநிலங்களுக்கும் ரயில்கள் ஓசூர் வழியாக  சென்று வருகின்றன. ஓசூரில் கெலவரப்பள்ளி நீர்தேக்கம் அமைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் இங்கு வந்து இங்கிருந்து தென்பெண்ணை ஆற்றில் சென்று கிருஷ்ணகிரி அணையை அடைந்து கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, உள்பட 5 மாவட்டங்கள் வழியாக சென்று இந்த நீர் கடலூரில் கடலில் கலக்கின்றன. ஓசூர் தொரப்பள்ளியில் மூதறிஞர் ராஜாஜி பிறந்தார். அவரது நினைவை போற்றும் வகையில் அவர் வசித்த வீடு நினைவு இல்லமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.குளிர்ந்த சீதோஷ்ண நிலை கொண்ட ஓசூரில் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கிருந்து தினமும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதே போல ஓசூர் ரோஜாவும் உலக அளவில் புகழ் பெற்றதாக விளங்குகிறது. ஓசூர் மத்திகிரியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பண்ணை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படி தொழில் வளமும்,இயற்கை சூழலும் நிறைந்த ஓசூர்,மாநகராட்சியாக மாறியுள்ளதால்,பல்வேறு சலுகைகள் கிடைத்து மேலும் வளம் பெறும் என்பதே ஒட்டு மொத்த மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

மிரளவைக்கும் குற்ற சம்பவங்களால்  பீதி
பல்வேறு நிலைகளில் தரம் உயர்ந்துள்ள ஓசூரில் சமீபகாலமாக திடுக்கிடும் குற்ற சம்பவங்களும் கொலைகளும் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.  ஓசூர் நகரில் தற்போது ஓசூர் டவுன், சிப்காட், அட்கோ, மத்திகிரி ஆகிய 4 காவல் நிலையங்கள் உள்ளன. ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது  ஓசூர் மாநகராட்சி அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளதால் ஐ.பி.எஸ் அதிகாரியை தலைமையாக கொண்டு காவல்துறை செயல்பட வேண்டும். ஓசூர் மாநகரில் உள்ள மக்கள் தொகை, தொடரும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

* 879 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது ஓசூர்
* உலக அளவில் புகழ் பெற்ற ஓசூர் ரோஜா
* குண்டூசி முதல் விமான பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்
* சேலம் மாவட்ட தலைமையிடமாக இருந்தது


Tags : Hosur ,speakers ,population ,city , Hosur , city , rich population, 3 native speakers.
× RELATED குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் மூச்சுச்திணறல்