×

ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் அம்மா குடிநீர் மையம்: கொளுத்தும் வெயிலில் தாகத்தால் பயணிகள் அவதி

மானாமதுரை: மானாமதுரை பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் நிலையம் மூடிக்கிடப்பதால் கொளுத்தும் வெயிலில் பயணிகள், பொதுமக்கள் தாகத்தால் அவதிப்படுகின்றனர். பஸ் நிலையங்களில் மலிவு விலையில். அம்மா குடிநீர் நிலையம் திறக்கப்பட்டு, பாட்டில் குடிநீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மானாமதுரை புது பஸ்நிலையத்தில், அம்மா குடிநீர் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கு குடிநீர் சென்னை கும்மிடிப்பூண்டியில் இருந்து குடிநீர் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டு சிவகங்கை பஸ்டெப்போவில் இருந்து வந்து கொண்டிருந்தது.மானாமதுரை பஸ்ஸ்டாண்டில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதால் நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 பாட்டில்கள் வரை விற்பனை நடந்தது. கோடை துவங்கும்போது ராமேஸ்வரம் சுற்றுலா செல்வோர், தாயமங்கலம், இருக்கன்குடி செல்லும் பக்தர்கள் வருகையின்போது இன்னும் கூடுதலாக தண்ணீர் பாட்டில்கள் விற்பனை நடக்கும்.

ஆனால் கடந்த ஒரு ஆண்டாக அம்மா குடிநீர் மையம் பூட்டியே கிடக்கிறது. கடந்த சில நாட்களாக மானாமதுரை பகுதியில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள குடிநீர் ஆலையில் பாட்டில் தட்டுப்பாடு, மதுரை வரும் தண்ணீரை மானாமதுரைக்கு எடுத்து வருவதில் ஏற்பட்டுள்ள திடீர் சிக்கல், டேமேஜ் பாட்டிலுக்கு பணம் பிடித்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் மூடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் அம்மா குடிநீர்பாட்டில் கிடைக்காமல் அவதி படுகின்றனர். பஸ் நிலையத்தில் தனியார் கடைக்காரர்கள் அதிக விலைக்கு தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்கின்றனர்.இதுகுறித்து பஸ்பயணி ஒருவர் கூறுகையில், ‘ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்கிறேன். மானாமதுரையில் பஸ்நிலையத்தில் அம்மா குடிநீர் பூட்டிக்கிடக்கிறது. குழந்தைகள் தாகத்தால் தவிக்கின்றனர். எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் அம்மாகுடிநீர் மையத்தை பயணிகளுக்காக திறந்துவைத்து குடிநீரை விற்பனை செய்வதை உறுதி செய்யவேண்டும்’ என்றார்.

Tags : Drinking Water Center , Mother's, Drinking Water, Center
× RELATED ஸ்ரீராம் வார்டில் சுத்திகரிப்பு குடிநீர் மையம் திறப்பு