×

2018 குரூப் 4 தேர்விலும் முறைகேடு: தேர்வர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்தது சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்!

சென்னை: 2018ம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்விலும் முறைகேடு அரங்கேற்றப்பட்டு கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வரும் குரூப் 4 மற்றும்  குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் தரவரிசையில் முன்னிலை பெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குரூப் 4, குரூப் 2 ஏ மற்றும் விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய இடைத்தரகராக ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன் ஆகியோரை குரூப் 4 மற்றும்  குரூப் 2 ஏ வழக்குகளில் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

மேலும் ஜெயக்குமாரின் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களையும் காவலில் எடுத்து விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையில் 2018ம் ஆண்டில் நடந்த குரூப் 4 தேர்வில் 40க்கும் மேற்பட்ட இடம் தலா 10 லட்சம் ரூபாய் என்ற அளவில் 4 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. ஆனால் விடைத்தாளில் மோசடி செய்ய முற்பட்ட  போது பாதுகாப்பாக சென்ற காவலர்கள் உஷாராக இருந்ததால் முறைகேடு முழுவதுமாக அரங்கேற்றப்படவில்லை என்றும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சில தேர்வர்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை இடைத்தரகர் ஜெயக்குமார் திருப்பி அளித்ததாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் புதியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : CBI ,scandal ,Group 4 ,investigation ,CBIICID , 2018 Group 4 Select, Abuse, Selector, Money, Collection, CBCID, Exposure
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...