×

கொரோனா வைரஸ் பரவலால் ஜப்பான் கப்பலில் சிக்கி தவித்த 119 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர்

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலால் ஜப்பான் கப்பலில் சிக்கி தவித்த 119 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் உள்ள இந்தியர்களை தனி விமானம் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அந்நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 138 இந்தியர் உட்பட 3,711 பேரும் கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பான் கப்பலில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

அந்த கப்பலில் இருந்து ஹாங்காங்கில் இறங்கிய பயணிக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையொட்டி இந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை நடைபெற்றது. மேலும் பயணக் கப்பலில் சிக்கிய இந்தியர்கள் விரைவில் இந்தியாவுக்குத் திரும்புவர் என கூறப்பட்டது. சீனாவின் வுஹானில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீதும் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டர் பதிவில் கூறுகையில், கொரோனா அச்சத்தால் ஜப்பான் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர்களில் 119 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். 119 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டினருடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது.

இந்தியர்களுடன் இலங்கை, நேபாளம், தென் ஆப்பிரிக்கா, பெரு நாட்டைச் சேர்ந்தவர்களும் டில்லி வந்துள்ளனர். ஹாங்காங்கில் இருந்து யோகாஹாமாவுக்கு 138 இந்தியர்கள் உட்பட 3,711 பேர் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் சென்றனர். ஹாங்காங்கில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டதையடுத்து 3711 பேரும் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஐ.ஏ.எஃப் விமானம் மூலம் வுஹானில் இருந்து வெளியேற்ற 100 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ உதவி தேவைப்படும் இந்தியர்களை இந்த ஐ.ஏ.எஃப் விமானம் மீண்டும் கொண்டு வரும் என்று கூறியுள்ளனர். இதற்கு சீன அரசாங்கமும் அனுமதி வழங்கியுள்ளது. எனவே நான் மிகவும் நிம்மதியடைகிறேன் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தற்போது சீனாவில் கொரோனா பாதிப்புக்குள்ளான வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்கள் நாடு திரும்பினார். 76 இந்தியர்கள் மற்றும் 36 வெளிநாட்டவரையும் விமானப்படை விமானம் மீட்டு வந்தது.


Tags : Indians ,Japan ,shipwreck , Corona virus, spread, ship to Japan, 119 Indians returned to the country today
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...