×

என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு ஓய்வுக்கு பின் பதவி உயர்வு: குஜராத் அரசு அறிவிப்பு

அகமதாபாத்: இஸ்ரத் ஜகான், சொராபுதின் ஆகியோரை என்கவுன்டரில் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி வன்சாராவுக்கு ஓய்வுக்கு பிறகு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.  கடந்த 1987ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி டிஜி வன்சாரா. இவர் குஜராத் மாநிலம், அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸ் டிஐஜி.யாகவும், தீவிரவாத தடுப்பு படை டிஐஜி.யாகவும் பணியாற்றினார். கடந்த 2005ம் ஆண்டு சொரபுதின் ஷேக் என்ற தீவிரவாதியை என்கவுன்டரில் கொன்றது, குஜராத் முதல்வராக இருந்த மோடியை கொல்ல வந்த குற்றச்சாட்டின் பேரில் இஸ்ரத் ஜகான் என்ற பெண் தீவிரவாதியை கடந்த 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி சுட்டுக் கொன்ற வழக்கு ஆகியவற்றில் வன்சாரா மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

 இவை 2ம் போலி என்கவுன்டர் என கூறப்பட்டது. இதையடுத்து, பணியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் இந்த இருவழக்குகளில் அவர் குற்றமற்றவர் என நிருபிக்கப்பட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு மே 31ம் தேதி குஜராத்தில் போலீஸ் டிஐஜியாக பணியாற்றி வந்தபோது இவர் ஓய்வு பெற்றார்.  பணியில் இருந்து ஓய்வு பெற்று 6 ஆண்டுகளுக்கு பின்னர் அவருக்கு நேற்று முன்தினம் ஐஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கான அறிவிப்பை குஜராத் மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள ஆணை, கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையின் பிரதியை பதிவிட்டு வன்சாரா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `எனக்கு பணி ஓய்வுக்கு பிறகு ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மற்றும் குஜராத் அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.



Tags : retirement ,government ,Gujarat ,IPS ,officer ,Catchappattamunnal ,Gujarat Government Notice , Encounter Case, Crime, Former IPS Officer, Promotion, Gujarat Govt
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...