×

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு: n வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு n கூட்டம், கூட்டமாக வெளியேறும் மக்கள்

புதுடெல்லி: டெல்லியில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இயல்பு நிலையை மீட்டெடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில், ஆதரவு மற்றும் எதிர்ப்பு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் கலவரத்தில் முடிந்தது. கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வரும் வன்முறை காரணமாக இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் குண்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்கிற அச்சமும் நிலவுகிறது.

வடகிழக்கு டெல்லியின் மவுஜ்பூர், ஜப்ராபாத் மற்றும் சாந்த்பாக் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைப்பு, கடைகள் சூறையாடல், துப்பாக்கிச்சூடு, தடியடி, கல்வீச்சு என கொந்தளிப்பான நிலையில் வடகிழக்கு டெல்லி சிக்கியுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு நடக்க இருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு டெல்லியில் வசிக்கும் மக்கள் பலரும் மூட்டை முடிச்சுகளோடு கூட்டம், கூட்டமாக ஊரை காலி செய்து வருகின்றனர். இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 6,000 போலீசார் மற்றும் 1000 துணை ராணுவப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சாந்த்பாக், ஜப்ராபாத், பஜன்புரா, யமுனா விகார், மவுஜ்பூர் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கலவரம் நடந்த வடகிழக்கு டெல்லியில் இரு தினங்களாக கடைகள் திறக்கவில்லை. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.கலவரத்தை கட்டுப்படுத்த வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் ஜப்ராபாத் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பெண்கள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கலவரப்பகுதிகளில் இயல்பு நிலையை மீட்டெடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். இதையடுத்து செவ்வாய்கிழமையன்று இரவே களத்தில் இறங்கிய அஜித் தோவல், டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் சட்டம் ஒழுங்கு சிறப்பு கமிஷனர் எஸ்என் வத்சவா மற்றும் அதிகாரிகளுடன் கலவர பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர். பின்னர், அங்குள்ள உள்ளூர் மக்கள் மற்றும் அனைத்து சமுதாய, மத பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி இயல்பு நிலையை கொண்டு வருவது குறித்து நம்பிக்கை அளித்தார்.

இந்நிலையில், நேற்று நண்பகல் மீண்டும் அஜித் தோவல் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தோவல், தற்போது நிலை கட்டுக்குள் உள்ளதாகவும், இயல்பு நிலை திரும்பிக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைதி காக்க பிரதமர் வலியுறுத்தல்
டெல்லி கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படுகிறது. காவல்துறை மற்றும் பிற ஏஜென்சிகள் அமைதி மற்றும் இயல்புநிலையை உறுதிப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அமைதியும் நல்லிணக்கமும் தான் நமது நெறிமுறைகளுக்கு முக்கியமானவை. அமைதியையும், சகோதரத்துவத்தையும் பேணுமாறு எனது டெல்லி சகோதர சகோதரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். அமைதியாக இருப்பது முக்கியம். இயல்புநிலை விரைவில் மீட்டெடுக்கப்படும்’’ என கூறி உள்ளார்.

புலனாய்வு அதிகாரி மர்ம மரணம்
மத்திய புலனாய்வு துறை (இன்டலிஜென்ஸ் பீரோ) சார்ந்த அதிகாரி அங்கித் சர்மா, சாந்த்பாக் நகரில் வசித்து வந்தார். அவர் செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சாந்த்பாக் பகுதியிலுள்ள பாலம் அருகே சென்றபோது கும்பலால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், கலவரத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு பகுதிகளில் ஒன்றான ஜப்ராபாத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து அவரது சடலம் நேற்று மீட்கப்பட்டது. புலனாய்வுத்துறையில் பணிபுரியும் அங்கித்தின் தந்தை ரவீந்தர் சர்மா, ஆம் ஆத்மி கட்சித் தலைவரின் ஆதரவாளர்கள் அங்கித்தை தாக்கி அவரைக் கொன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். அங்கித் தாக்கப்பட்ட பின்னர் சுடப்பட்டதாக ரவீந்தர் சர்மா போலீசாரிடம் தெரிவித்தார்.

காங்கிரஸ் அமைதி பேரணி
வடகிழக்கு டெல்லி வன்முறையில் உயிரிழப்பு ஏற்பட்டதை கண்டித்து கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து காந்தி அருங்காட்சியகம் நோக்கி பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அமைதி பேரணி சென்றனர். இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அருங்காட்சியகம் முன்பு இரும்பு தடுப்புகளை போலீசார் ஏற்கனவே அங்கு குவித்திருந்ததால், அங்கு நின்றபடி காந்திக்கு மிகவும் பிடித்த ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பஜனை பாடலை அவர்கள் பாடினர்.

டெல்லி பிரச்னை குறித்து ஆலோசிக்க ஜனாதிபதியை சந்தித்து பேச எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு
டெல்லியின் வன்முறை பற்றி எரிவதால், ஜனாதிபதியிடம் இதுகுறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘நானும், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், லோக் தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் மற்றும் திமுக, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் உங்களை சந்தித்து டெல்லி நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த விரும்புகிறோம். இதற்காக நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளனர்.

கபில் மிஸ்ரா ஆவேசம்
வடகிழக்கு டெல்லியின் ஜப்ராபாத் பகுதியில், கடந்த சனிக்கிழமை குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள், அங்குள்ள மெட்ரோ நிலையத்துக்கு அருகில் கூடி போராட்டம் நடத்தினர். இதைக் கண்டித்த பாஜ தலைவர் கபில் மிஸ்ரா, `போராட்டக்காரர்களை 3 நாட்களுக்குள் அகற்றாவிட்டால், நாங்கள் களத்தில் இறங்கி அகற்றுவோம்’’ என்று எச்சரிக்கை விடுத்தார். அடுத்தநாள் தான் டெல்லியின் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில், கபில் மிஸ்ரா டிவிட்டர் பதிவில், ‘‘காஷ்மீர் தீவிரவாதி புர்ஹான் வானி, நாடாளுமன்ற தாக்குதலில் மூளையாக செயல்பட்டு தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவை தீவிரவாதியாக கருத மறுக்கும் தலைவர்கள்தான் என்னை தீவிரவாதி என்கின்றனர். யாகூப் மேனன், உமர் காலித், ஷார்ஜில் இமாம் ஜாமின் கிடைக்க நீதிமன்றம் சென்றவர்கள்தான் என்னை கைது செய்ய முனைப்பு எடுத்து வருகின்றனர்’’ என்று கூறியுள்ளார்.

‘குஜராத் கலவரத்தைநினைவூட்டுகிறது’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி விடுத்துள்ள அறிக்கையில், ‘‘டெல்லி வன்முறை 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தை நினைவூட்டுகிறது. வன்முறையை முடிவு கட்ட ராணுவத்தை அழைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளார். வன்முறைக்கு காவல்துறையும், அரசும்தான் காரணம்’’ என்று கூறியுள்ளார்.

கொடி அணிவகுப்பு
வன்முறையை தொடர்ந்து, வடகிழக்கு டெல்லியில் காவல்துறை துணை கமிஷனர் வேத் பிரகாஷ் சூர்யா தலைமையில் போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தியது அங்கு இன்னும் பீதி அடங்கவில்லை என்பதை உணர்த்தியது. கலவரம் வெடித்தால் உடனே கட்டுப்படுத்தும் அளவில் அங்கு போலீஸ் படை குவிந்து உள்ளது.

ராணுவம் வரவேண்டும் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
டெல்லி கலவரம் நீடித்து வருவது தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், உறக்கம் கொள்ள முடியாதபடி செவ்வாய் இரவு முழுவதும் விரும்பத்தகாத தகவல்களாக எனக்கு கிடைத்திருப்பது, வடகிழக்கு டெல்லியில் அபாய நிலைமை குறையவில்லை என்பதையும், என்ன தான் தீவிரமாக பாடுபட்டும், வெடிக்கும் கலவரங்களை கட்டுப்படுத்தும் துணிச்சலை போலீசார் இழந்து இருப்பதாகவும் தோன்றுகிறது. ராணுவத்தை அங்கு களமிறக்க வேண்டியது மிகவும் அவசியம். கலவர பகுதிகளில் தடையுத்தரவு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.Tags : Delhi ,meeting ,exit , Delhi riots, death toll rises to 27
× RELATED உயிரிழப்பு நாள்தோறும் அதிகரிப்பு...