வெள்ளை மாளிகையிலும் இந்தியர்களுக்கு செல்வாக்கு: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரைன் பாராட்டு

வாஷிங்டன்: ‘அமெரிக்காவிலும் வெள்ளை மாளிகையிலும் இந்தியர்களுக்கு  நண்பர்கள் உள்ளனர்’ என அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் குஷ்னர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தனர். அவர்களுடன் அமெரிக்க உயர் பிரதிநிதிகள் குழுவும் இந்தியா வந்திருந்தது.  இவர்கள் அகமதாபாத், ஆக்ரா மற்றும் புதுடெல்லியை பார்வையிட்டனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். அமெரிக்கா செல்லும் வழியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன் தனது டிவிட்டர் பக்கத்தில், “ அமெரிக்க அதிபர் மற்றும் முதல் பெண்மணி மெலானியா, பிரதிநிதிகள் குழுவிற்கு ஆதரவு அளித்த இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியர்களுக்கு அமெரிக்காவிலும், வெள்ளை மாளிகையிலும் நண்பர்கள் இருக்கின்றனர்” என பதிவிட்டு இருந்தார். இந்தியர்களுக்கு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையிலும் செல்வாக்கு இருப்பதையே மறைமுகமாக இவ்வாறு அவர்  சுட்டிக்காட்டினார்.

மேலும், வெள்ளை மாளிகையின் பிரத்யேக டிவிட்டர் பக்கத்திலும், “இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இந்திய மக்கள் அளித்த வியக்கத்தக்க விருந்தோம்பலுக்கு நன்றி” என பதிவிடப்பட்டு இருந்தது. மேலும் அதிபர் பயணம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அமெரிக்க அதிபரின் இந்த முதல் இந்திய பயணமானது இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தியுள்ளது. அதிபரின் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முதலீடு, வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற வலுவான பொருளாதார ஒப்பந்தங்களால் இரு நாடுகளும் பயன்பெறும். பிராந்தியத்தில் நிலையான, வெளிப்படையான, தரமான உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் உறுதி கொண்டுள்ளன.

இரு நாடுகளும் பாதுகாப்பு தொடர்பான தங்களது உறவை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தான் பணியாற்றும்.” என குறிப்பிடப்பட்டு இருந்தது. ‘இந்தியா பெருமைக்குரியது’ இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று மாலை அவர் அமெரிக்கா சென்றடைந்தார். அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியா பெருமைக்குரியது. எனது இந்திய பயணம் மிகவும் வெற்றி அடைந்தது’’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>