×

கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் தங்கதமிழ்ச்செல்வன் மனு

சென்னை: கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார்.முன்னாள் எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்திக்க வந்தார். அவர் இல்லாததால், சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து மனு அளித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம்  கூறியதாவது:உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை சபாநாயகரிடம் கொடுத்துள்ளோம். அந்த மனுவில், 2017ம் ஆண்டு சம்பவம் நடந்தது. 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. மணிப்பூர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தலைவர் 3 மாதத்தில் முடிவை அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அந்த அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களை 3 வருடங்களாக தகுதி நீக்கம் செய்யாமல் இழுத்தடித்தது தவறு. பதவி காலம் இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், அவசரமாக தகுதி நீக்கம் செய்ய  வேண்டும் என்று கோரிக்கையில் வலியுறுத்தி உள்ளோம்.தகுதி நீக்கம் என்பது, ஒரு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொறடா உத்தரவை மீறி மாற்றி ஓட்டு அளித்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அவதூறு செய்ததாக அர்த்தம்.
அதன்படி சட்டப்படி 15 நாட்களுக்குள் சபாநாயகர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று உச்ச நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வழக்கறிஞர் வாதாடின பிறகுதான் சபாநாயகர் நோட்டீசே அனுப்பியுள்ளார். இதுவே குற்றம். ஆகவே  தீர்ப்பின்படி விரைந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

சபாநாயகர் முடிவு எடுக்கவில்லை என்பதால்தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். தற்போது உச்ச நீதிமன்றம் மீண்டும் சபாநாயகருக்கே அனுப்பி இருக்கிறது. அதை ஏற்று, சட்டப்பேரவை தலைவர் மாற்றி ஓட்டு போட்டவர்கள் மீது நேர்மையாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்று மனு அளித்துள்ளோம். சபாநாயகர் சட்டத்தின்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு அவர்  கூறினார்.



Tags : Speaker ,OPS , Voted ,violation , OPS, Speaker
× RELATED ராகுல்காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட...