×

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு பட்டியல் வெளியீடு சென்னையில் 5,759 வாக்குச்சாவடிகள்

* 2ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் * ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை :  உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னையில் 5, 759 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் வரும் 2ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக தேர்தல் மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை விரைவாக  முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  கடந்த 14ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார்  செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்திருந்தது.  
இதன்படி நேற்று அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ரிப்பன் மாளிகை வளாகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார்.

இந்த வரைவு பட்டியல் படி சென்னையில் மொத்தம் 5,759 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கு 135 வாக்குசாவடிகளும், பெண்களுக்கு 135 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இருபாலாருக்காக 5489 வாக்குசாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குசாவடி பட்டியல் ரிப்பன் மாளிகை, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 5759 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வரும் 2ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி கருத்தம் கேட்கப்படும். இதனைத்  தொடர்ந்து 6ம் தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இந்த வாக்குச்சாவடி பட்டியல் படி அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 639 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 97 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகரிப்பு
2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலைவிட தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு பட்டியலில் 45 வாக்குச்சாவடிகள் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன.

Tags : polling stations ,Chennai , Publication ,Draft, Local Elections,Chennai
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...