×

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது: வேலூர் சிறையில் அடைப்பு

சேலம்:  பெங்களூரை சேர்ந்தவர் ஆஷாகுமாரி(53). இவருக்கு சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டில் சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில், ஆஷாகுமாரி, கடந்த 24ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து  ஆஷாகுமாரி கூறுகையில், ‘‘சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக எங்களது வீட்டில் வாடகைக்கு இருந்து வருகிறார். கடந்த ஆண்டுடன் வாடகை ஒப்பந்தம் முடிந்தது. வீட்டை காலி செய்யுமாறு ஒரு வருடமாக கேட்டு வருகிறோம். வீட்டிலிருந்து வெளியேறாததுடன் கடந்த 10 மாதமாக வாடகையும் கொடுக்கவில்லை.

கடந்த 24ம் தேதி வீட்டிற்கு சென்று காலிசெய்ய கோரியபோது,  மறுத்ததோடு என்னை ஆபாச வார்த்தைகளால் பேசி, கொலை முயற்சி நோக்குடன் தள்ளிவிட்டு மிரட்டல் விடுத்தார்,’’ என்றார். மேலும் இது தொடர்பாக சேலத்தில் முகாமிட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், ஆஷாகுமாரி புகார் மனு அளித்தார். மேலும்   பியூஸ் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி சேலம் அரசு மருத்துவமனையில் ேசர்ந்து சிகிச்சையும் பெறுகிறார். இதையடுத்து கன்னங்குறிச்சி போலீசார் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை, அடித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து நேற்று மாலை பியூஸ் மானுஷ் கைது செய்தனர். பின்னர் சேலம் மகளிர் விரைவு கூடுதல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 முன்னதாக இது குறித்து பியூஸ் மானுஷ் கூறுகையில், ‘‘8ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டு ஆஷாகுமாரியின் வீட்டில் குடியிருக்கிறேன். அதில் 5 ஆண்டுகள் மட்டுமே முடிந்துள்ளது. அவரது வங்கிக் கணக்கில் மாதா மாதம் பணத்தை செலுத்தி வருகிறேன். ஆனால் அந்த கணக்கு முடங்கியுள்ளதால் பணம் கணக்கில் ஏறவில்லை என்று அவர்களே கூறினர். ஒரு கட்டத்தில் அவர்கள் வாடகை கேட்டு வாக்குவாதம் செய்த போது, நான் தான் போலீசாரை வரவழைத்தேன். ஆனால் என்மீது அவதூறு புகார் பெறப்பட்டு, பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.



Tags : Fuse Manush ,Salem ,murder , woman ,charged ,murder, Manush, arrested
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...