×

கோடை விடுமுறையையொட்டி, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: அமைச்சர், அதிகாரிகளுக்கு பயணிகள் சங்கம் கோரிக்கை

நாகர்கோவில்: கோடை விடுமுறையை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக ரயில்வே அதிகாரிகள், ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கோரிக்கை மனுவில் பயணிகள் சங்கத்தினர் கூறியிருப்பதாவது: திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள், புனித இடமான வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்று மாதாவை தரித்துவிட்டு திரும்புவது வழக்கம். ஆனால் வேளாங்கண்ணிக்கு செல்ல நேரடியாக, மாவட்டத்தில் இருந்து ரயில் வசதி இல்லை. தனி ரயில் இல்லாதது கிறிஸ்தவர்களின் மத்தியில் ஒரு பெரும் குறையாகவே இருந்து வருகிறது.ஆகவே வேளாங்கண்ணிக்கு செல்ல இங்கிருந்து ஏதாவது ஒரு ரயிலில் திருச்சி செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து நாகப்பட்டிணம் செல்லும் ரயிலில் செல்லலாம் என்றாலும் கூட போதிய இணைப்பு ரயில்கள் இல்லாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதனால் வேளாங்கண்ணிக்கு செல்லும் பயணிகள் பஸ்களிலும், தனியார் வாடகை வேன்களிலுமாக பயணம் செய்கின்றனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவித்து இருமார்க்கங்களிலும், குமரி பயணிகளுக்கு பயன்படும் படியாக கால அட்டவணை அமைக்க வேண்டும். அதன்படி குழித்துறை, இரணியல், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, வள்ளியூர், நான்குநேரி ரயில் நிலையங்களில் நின்று செல்லத்தக்க வகையில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த மார்க்கத்தில் ரயில் இயக்கப்பட்டால் குமரி மாவட்டத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் செல்லும் பயணிகள், மாவட்டத்தில் இருந்து அந்த இடங்களில் பணிபுரிபவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் இது மிகவும் பயன் உள்ளதாக அமையும். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் இருந்து தற்போது திருச்சி வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் நடு இரவு நேரங்களில் தான் செல்கிறது. இதற்கு ஏற்றாற்போல்தான் கால அட்டவணைகள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

திருச்சிக்கு பயணிகள் வசதியான நேரத்தில் செல்ல எந்த ஒரு இரவு நேர ரயிலும் தற்போது இல்லை. கொச்சுவேளியில் இருந்து நாகர்கோவில், திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு ரயில் அறிவிக்கப்பட்டால், இந்த ரயில் திருச்சிக்கு அதிகாலை 4 மணிக்கு செல்லுமாறு கால அட்டவணை அமைக்கப்படும். இப்படி இயக்கப்பட்டால் தென்மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகளுக்கு ஒரு ரயில் வசதி கிடைக்கும். நாகப்பட்டிணத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரயில்பாதை அமைத்து, அங்கு புதிய ரயில் நிலையம் கட்டுவதற்கு வேளாங்கண்ணி கோவில் நிர்வாகம் சார்பில் ஒரு கோடி ரூபாய் ரயில்வேத்துறைக்கு அளிக்கப்பட்டது. உடனே திட்டமும் செயல்படுத்தப்பட்டது. ஆனால் வேளாங்கண்ணிக்கு புதிய ரயில்கள் இயக்குவதில் ரயில்வேத்துறை தொடர்ந்து மறுத்து வருகிறது. தற்போது வேளாங்கண்ணிக்கு 2 பயணிகள் ரயில், ஒரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது. வேளாங்கண்ணிக்கு செல்லும் தென்மாவட்ட பயணிகளுக்கு பயன்படும்விதத்தில் கொச்சுவேளில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் அறிவித்து இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Velankanni ,Thiruvananthapuram ,Nagercoil , Summer Holidays, Trivandrum, Nagercoil, Velankanni, Special Train
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது