×

விதிமுறைகள் மீறி கட்டப்பட்டதால் ஊட்டியில் 37 கட்டிடங்களுக்கு சீல்

ஊட்டி: விதிமுறைகள் மீறி கட்டப்பட்டதாக கூறி, ஊட்டியில் 37 கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் சட்டம் அமலில் உள்ள நிலையில், முறையாக அரசிடம் அனுமதி பெற்ற பிறகே விதிமுறைகளின் படி கட்டிடங்களை கட்ட முடியும். இந்த சட்டத்தின் படி வனத்துறை, புவியியல் துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களிடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள கமிட்டியிடம் அனுமதி பெற்ற பின்னரே கட்டிடங்களை கட்ட முடியும். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இந்த நிலையில், விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து நேற்று ஊட்டி நகரில், கமர்சியல் சாலை, விக்டோரியா ஹால், குன்னூர் ரோடு, லோயர் பஜார் உள்ளிட்ட 37 இடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். கமர்சியல் சாலையில் போலீசார் பாதுகாப்புடன் விதிமுறை மீறி கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் சென்றனர். பணிகளை துவக்கும் போது, அந்த கட்டிட உரிமையாளர் கட்டிடத்தை சீல் வைக்க அனுமதிக்கவில்லை. மேலும், பேச்சுவார்த்தைக்கு பின், விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை 2 நாட்களுக்குள் காலி செய்து கொடுப்பதாக கூறினார். இதனைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

Tags : buildings ,Ooty , Terms, Ooty, Buildings, Sealed
× RELATED மயிலாடும்பாறை அருகே பாதியில்...