×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேலம் நகருக்கு பெருமை சேர்க்க போகும் ஈரடுக்கு பஸ் நிலையம்

* மே 2 2 மேம்பாலத்துடன் உருவாகிறது
* டிசம்பரில் பணி முடியும்

சேலம்: சேலம் மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் 2 மேம்பாலத்துடன் கூடிய ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் நவீன வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 5வது பெரிய நகரமான சேலம் மாநகரில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகரில் ஈரடுக்கு மேம்பால பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. நாடு முழுவதும் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தில் 3வது பட்டியலில் சேலம் மாநகராட்சி இடம் பிடித்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி  சேலம் மாநகரில் பழைய பஸ் ஸ்டாண்ட்,வ.உ.சி.,மார்க்கெட் அடங்கிய பகுதிகள் ₹1000 கோடியில் உள் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுகிறது.

சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மாநகர பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பழைய பஸ் ஸ்டாண்டை நவீனப்படுத்த முடிவு செய்து, இடித்து அகற்றி விட்டு ₹92 கோடியில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டாக மாற்றும் பணி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. இதனால், அங்கிருந்து சேலம் மாநகர குதிக்குள்ளும், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், ராசிபுரம், மல்லூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கும் இயக்கப்படும் பஸ்களை நிறுத்த, அருகேயுள்ள போஸ் மைதானத்தில் ₹3 கோடியில் போஸ் மைதானத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுயடுத்து பழைய பஸ் ஸ்டாண்ட் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. பின்னர், அங்கு பில்லர் அமைக்கப்பட்டு, தரைதளம் அமைக்கும்  பணி முடிவடைந்து,மேல் தளத்துக்கு கான்கிரீட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி வரும் 2020ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் துரிதமாக  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் தரை தளத்தில் டூவீலர் பார்க்கிங்,கடைகள்,மேல் தளத்தில் பஸ்கள், நவீன வசதிகளுடன் கூடிய ஓட்டல்கள் அமைக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் 2 பாலங்களும் அமைக்கப்படுகிறது.கொண்டலாம்பட்டி,சீலநாயக்கன்பட்டி பகுதிக்கு செல்ல ஒரு மேம்பாலமும், அம்மாப்பேட்டை,புதிய பஸ் ஸ்டாண்ட்,அஸ்தம்பட்டி பகுதிக்கு செல்ல ஒரு மேம்பாலமும் அமைக்கப்படுகிறது. மேலும் இந்த பஸ் ஸ்டாண்டில் சோலார் பேனல் அமைக்கப்படுகிறது.

இது குறித்து சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாநகரில் சாலைகள் விரிவாக்கம், பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து அகற்றி விட்டு ₹92 கோடியில் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருவள்ளுவர் சிலையில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு செல்லவும், பஸ் ஸ்டாண்டில் இருந்து பாலம் வழியாக வெளியே செல்லவும் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. குண்டு போடும் சாலை வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு செல்லவும், பஸ் ஸ்டாண்டில் இருந்து பாலம் வழியாக வெளியே செல்லவும் மற்றொரு பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்டாண்ட் அருகே பூங்காவும் அமைக்கப்படுகிறது.

தற்போது, தரைமட்டதளம், மேற்கூரை பணி பகுதி முடிவுற்று, தரை தளத்தில் சிமெண்ட் கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அணைத்து பணிகளும் வரும் டிசம்பருக்குள் முடிவுற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு கமிஷனர் சதீஷ் கூறினார்.

வைபை இணைப்புடன் பயணிகள் தங்கும் அறை
‘‘ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில்,தினமும் 430 பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. 11,500 சதுர மீட்டரில் தரை தளம் அமைக்கப்பட்டு,4586 சதுர மீட்டரில் வணிக உபயோகத்திற்காக 54 கடைகள் அமைக்கப்படுகிறது.இத்தளத்தில் 1,181 வாகனங்கள் நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் அமைக்கப்படுகிறது.முதல் தளத்தில் 29 கடைகள் அமைக்கப்படுகிறது. 11 அரசு அலுவலகங்கள் கட்டப்படுகிறது.இத்தளத்தில் 26 பஸ்கள் நிறுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. 2ம் தளத்தில் 47 கடைகள் அமைக்கப்பட்டு,26 பஸ்கள் நிறுத்தம் வகையில் அமைக்கப்படவுள்ளது. மேற்கூரை தளத்தில் 11 கடைகள் அமைக்கப்படுகிறது. ரயி்ல் நிலையத்தில் உள்ளது போல்,இந்த பஸ் ஸ்டாண்டில் வைபை இணைப்பு வசதியும்,ஏ.சி வசதியும்,பயணிகள் தங்கும் அறையும் அமைக்கப்படுகிறது,’’என்றும் கமிஷனர் சதீஷ் தெரிவித்தார்.

* 11,500 சதுர மீட்டரில் தரை தளம்
* தினமும் 430 பஸ்கள் வந்து செல்ல வசதி
* ஏ.சி வசதியுடன் பயணிகள் தங்கும் அறை
* இரண்டு மேம்பாலங்கள், பூங்கா

Tags : City of Salem , City of Salem , proud , part , Smart City ,Project
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...